பாலஸ்தீன இன அழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் காசா, லெபனான், சிரியாவைத் தொடர்ந்து ஈரான் மீது கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் தாக்குதலை தொடங்கியது.

இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா அளித்துவரும் கண்மூடித்தனமான ஆதரவை நம்பி ஈரானில் தொடர் தாக்குதல் நடத்திய நிலையில் ஈரான் இதற்கு பதிலடி கொடுத்தது.

இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாக களத்தில் குதித்த அமெரிக்கா கடந்த ஞாயிறன்று ஈரானில் உள்ள மூன்று அணு ஆயுத மையங்களை தாக்கி அழித்தது.

ஈரானின் இறையாண்மையை சோதிக்கும் அமெரிக்காவின் இந்த செயலுக்கு உடனடியாக தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்தது.

இதையடுத்து ஈரானில் உள்ள அணு ஆயுத மையங்கள் மீது தான் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் மக்கள் மீது எந்த தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று விளக்கமளித்த அமெரிக்கா தனது இந்த ராணுவ பலத்தைக்காட்டி ஈரானை அமைதிப்பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.

அதேவேளையில் உலகநாடுகளின் ஆதரவை குறிப்பாக ரஷ்யா, சீனா, வட கொரியா ஆகிய நாடுகளின் ஆதரவை ஈரான் கோரிப்பெற்றது.

தவிர, ஹார்முஸ் ஜலசந்தியை மூடவும் திட்டமிட்டது ஈரானின் இந்த முடிவு அமெரிக்க – அரபு நாடுகளிடையேயான கூட்டணியில் பிளவை ஏற்படுத்திய நிலையில் ஓமன், குவைத் போன்ற நாடுகள் அமெரிக்க ஆதரவில் இருந்து சற்று ஒதுங்கியுள்ளன.

இந்த நிலையில் நேற்றிரவு ஈராக், சிரியா, பஹரைன் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.

கடந்த ஞாயிறன்று 115 விமானங்கள் மூலம் அமெரிக்கா ஈரான் மீது வீசிய அதே அளவிளான குண்டுகளை இந்த அமெரிக்க தளங்கள் மீது ஈரான் வீசியதாக் கூறப்படுகிறது.

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 40000 அமெரிக்க துருப்புகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதுடன் போருக்கு எதிராக அமெரிக்காவிலும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இந்த நிலையில் ஈரானும் இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் தற்போது அறிவித்துள்ளதுடன் ஈரானை சமாதானப் பேச்சுக்கும் அழைத்துள்ளார்.

இதையடுத்து பாலஸ்தீன பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.