மும்பை:
பிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய போட்டிகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஐபிஎல் 14ஆவது சீசன் ஏப்ரல் 9ஆம் தேதி துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சில வீரர்களுக்கு கொரோனா உறுதியானதால் எஞ்சிய போட்டிகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுவரை 29 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளன. எஞ்சிய 31 போட்டிகள் நிலுவையில் உள்ளது. இப்போட்டிகளை நடத்தாவிட்டால் பிசிசிஐக்கு சுமார் 200 கோடி நஷ்டம் ஏற்படும் எனக் கங்குலி தெரிவித்திருந்தார்.

இதனால் எஞ்சிய போட்டிகள் நிச்சயம் நடைபெறும் எனக் கூறப்பட்டது. இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து காணப்படுவதால், முதலில் இங்கிலாந்தில்தான் போட்டிகளை நடத்தத் திட்டமிடப்பட்டது. ஆனால் இங்கு ‘ஹன்ரெட்’ என்னும் உள்ளூர் தொடர் நடைபெறவிருப்பதால், எஞ்சிய எஞ்சிய போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த வாய்ப்பில்லாமல் போனது.

இதனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டியை நடத்துவதுதான் சிறந்தது எனக் கருதப்பட்டது. காரணம், இங்கு ஐபிஎல் 13 சீசன் நடத்தப்பட்டபோது சரியான முறையில் மருத்துவ பாதுகாப்பு வட்டம் கடைப்பிடிக்கப்பட்டு, வெற்றிகரமாகத் தொடர் நடத்தி முடிக்கப்பட்டதுதான். இதனால்,

பிசிசிஐ இங்குதான் போட்டிகளை நடத்தும் என கிரிக்கெட் விமர்சகர்கள் உறுதியாகக் கூறினர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில், எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட பிசிசிஐ “இன்று (சனிக்கிழமை) பிசிசிஐ ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஐபிஎல் 14ஆவது சீசனின் எஞ்சிய லீக் போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாகச் சம்மதம் தெரிவித்தனர். போட்டிகள் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நடத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் நடைபெறும் தேதிகள் குறித்து அறிவிக்கவில்லை.

எஞ்சிய லீக் போட்டிகளைச் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10 வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.