மும்பை: கொரோனா பரவல் காரணமாக தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் பட்சத்தில், 2020ம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர், காலவரையின்றி ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால், ஊரடங்கு நீட்டிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பஞ்சாப், மராட்டியம், கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், வரும் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஐபிஎல் தொடர் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ தரப்பில் கூறப்படுவதாவது; சில மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இத்தொடரை ரத்து செய்ய வாய்ப்பு இல்லை.

ஏனெனில் ரூ.3,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே காலவரையின்றி ஒத்திவைக்கப்படலாம். இயல்பு நிலைக்கு திரும்பிய பின், தொடரை எப்போது நடத்துவது என ஆலோசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.