சென்னை:

கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள  ஐபிஎல் 12வது சீசன் கிரிக்கெட் தொடர் இன்று  சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில்  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகிறது.

இன்று நடைபெறும் முதல் போட்டியை காண சென்னை ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று சிஎஸ்கே சாதனை படைக்க வேண்டும் என்று பரபரப்புடன் சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஏற்கனவே 3 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கே  அணிதான் இந்தமுறையும் கோப்பையை கைப்பற்றும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர்.

சிஎஸ்கே அணியில் விளையாடும் வீரர்கள் பெரும்பாலோர், கடந்த ஆண்டு விளையாடிய வீரர்கள் தொடர்கின்றனர்.  புதிதாக இரு வீரர்கள் மட்டுமே எடுக்கப்பட்டனர்.

ஐபிஎல்லில்  கடந்த 11 சீசன்களில்  ஏராளமான வெளிநாட்டு  வீரர்கள் பல்வேறு அணிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.  ஆஸ்திரேலியாவின் 37 வயது வீரர் ஷேன் வாட்ஸன் கடந்த இரு ஆண்டுகளாக சிஎஸ்கே அணியிலும் உள்ளார்.

கடந்த ஆண்டு சீசனில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்று 15 ஆட்டங்களில் 555 ரன்கள் குவித்து, 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அதசத்தினார். சிஎஸ்கே அணிக்கு அதிரடியான தொடக்கத்தை அளிப்பதில் வாட்ஸன் பங்கு முக்கியம்.

அதுபோல  சிஎஸ்கே அணியில் கடந்த பருவத்தில் பந்துவீச்சில் மாபெரும் தூணாக விளங்கியவர் தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி. தற்போது  இங்கிடிக்குத் தோள்பட்டை யில் திடீரென கடுமையான வலி  ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் அவரை ஓய்வில் இருக்க வேண்டும் என்று கூறியதால், அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

அதே வேளையில், ஐபிஎல் ஆட்டத்தில்  கேப்டன் தோனி 4-வது வீரராக களமிறங்குவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தோனி தலைமையிலான சென்னை அணியில் வாட்சன், ரெய்னா, பிராவோ, அம்பதி ராயுடு என அதிரடி வீரர்கள் உள்ளனர். கேதார் ஜாதவ், ஹர்பஜன் சிங், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சும் எதிரணிக்கு சவாலாக இருக்கும்.

கோலி தலைமையிலான பெங்களூரு அணியில் டிவில்லியர்ஸ், ஸ்டெய்னிஸ், ஹெட்மயர் போன்ற வீரர்களும், வாஷிங்டன் சுந்தர், உமேஷ் யாதவ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் உள்ளனர்.

ஐபிஎல் தொடக்க விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு, டிக்கெட் விற்பனை மூலம் கிடைத்த வசூலை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இன்று நடைபெற உள்ள ஆட்டத்தைக்காண  இப்போதே சென்னை சேப்பாக்கம் பகுதி களைகட்டி வருகிறது.