டெல்லி

தோனி வரும் ஐபிஎல் போட்டிகள் மூலம் தான் இந்திய அணிக்கு திரும்ப முடியும் எனும் கருத்தை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆஷிஷ் சோப்ரா மறுத்துள்ளார்.

2019 உலகக்கோப்பை அரையிறுதிக்குப் பின் தோனி இந்திய அணிக்காக விளையாடவில்லை. வரும் ஐபிஎல் போட்டிகளில் அவரின் ஆட்டத்தை பொறுத்து T20  க்கான இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஐபிஎல் போட்டிகள் காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை கேள்விக்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஆஷிஷ் சோப்ரா இக்கருத்தை மறுத்துள்ளார்.

“தோனி தன்னை ஐபிஎல் போட்டிகளில் நிரூபித்தால் தான் இந்திய அணிக்கு மீண்டும் திரும்ப முடியும் என்பதில் உண்மையில்லை.

தோனியின் கிரிக்கெட் அனுபவம் மற்றும் சாதனைகளின் அடிப்படையில் மட்டுமே கிரிக்கெட் வாரியம் அவரைத் தேர்வு செய்யும்.

இந்திய அணிக்காக தோனி விளையாட வேண்டும் என பிசிசிஐ நினைத்தால், இந்திய அணிக்காக தோனி விளையாட நினைத்தால் இது சாத்தியம் ஆகும். அதைத் தாண்டி ஐபிஎல் போட்டிகளில் தோனி ஆடுவதைப் பொறுத்துதான்  இந்திய அணிக்கு திரும்ப முடியும் என்பதில் உண்மையில்லை.

மேலும் தற்போது ஐபிஎல் போட்டிகள் தள்ளிப் போவதால் தோனிக்கு வயதில் ஒன்று கூடும்.

அதுமட்டுமின்றி அவர் கிரிக்கெட் விளையாடாத காலம் 18 மாதங்களைக் கடப்பதால் பிசிசிஐ தோனியை தவிர்க்க வாய்ப்புள்ளது. தவிர ஐபிஎல் போட்டிகள் அதற்கு காரணமாகாது” என ஆஷிஷ் சோப்ரா கூறியுள்ளார்.