சென்னை: ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராவதற்காக, முன்கூட்டியே அமீரக நாட்டிற்கு செல்ல திட்டமிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட சில அணிகளை, தங்கள் பயணத்தை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது பிசிசிஐ.
ஏனெனில், அந்நாட்டில் மொத்தமே 3 மைதானங்களே இருப்பதால், பல அணிகளும் பயிற்சிக்காக போட்டிப்போடும் நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சிக்கலில் மாட்டியுள்ளது.
இந்நிலையில், இதை பிசிசிஐ கவனத்திற்கு அவர்கள் கொண்டுவரவே, முன்கூட்டியே அமீரகம் செல்லும் முயற்சியை ஒத்திவைக்குமாறு கேட்டுள்ளது பிசிசிஐ. ஏனெனில், சென்னை அணியைப் போலவே, மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளும் அமீரக நாட்டிற்கு விரைந்து சென்று பயிற்சியில் ஈடுபட வேண்டுமென அந்த அணியின் நிர்வாகங்கள் விரும்புகின்றன.
எனவே, இந்த விஷயத்தில் தலையிட்ட பிசிசிஐ, இதற்கான ஒரு திட்ட அட்டவணையை தயார்செய்து, அதன்படி, அங்கிருக்கும் மைதானங்களில் ஆகஸ்ட் 27 முதல் அனைத்து அணிகளுக்கும் வாய்ப்பு வழங்க உத்தேசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இம்மாதம் 10ம் தேதியே, சிஎஸ்கே அணியினரை, அமீரகம் அனுப்பி வைப்பதற்கு அந்த அணி நிர்வாகம் திட்டமிட்டது குறிப்பிடத்தக்கது.