துபாய்
ஐ பி எல் 2022 போட்டிகளில் இரு புதிய அணிகளான அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் உரிமையாளர் ஏலம் முடிவடைந்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் 2022 ஆம் ஆண்டு முதல் இரு புதிய அணிகள் அறிமுகப்படுத்த உள்ளன. இவை இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் ஒன்றைத் தலைமையாகக் கொண்டு இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அவை அகமதாபாத், லக்னோ, கட்டாக், தர்மசாலா, கவுகாத்தி மற்றும் இந்தூர் ஆகும். இவற்றை விலைக்கு வாங்க 10 நிறுவனங்கள் போட்டியிட்டன.
இன்று இதற்கான ஏலம் துபாயில் நடந்தது. ஏலத்தில் கலந்துக் கொண்ட நிறுவனங்களில் அதானி குழுமம், மான்செஸ்டர் லிமிடட், டாரெண்ட் பார்மா, இந்துஸ்தான மீடியா, ஆர் பி சஞ்சீவ் கோயங்கா குழுமம், காப்ரி குளோபல் மற்றும் சிங்கப்பூரைச் சேர்ந்த இரேலியா நிறுவனம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இந்த நிறுவனங்கள் தங்கள் விலைப்புள்ளிகளை இரு கவர்களில் அளித்துள்ளனர். அதில் ஒன்று நிறுவனம் மற்றும் பொருளாதார தகவல் மற்றொன்று விலை ஆகும். இதில் நிறுவனம் மற்றும் பொருளாதார தகவல்களை முதலில் ஆய்வு செய்த பிசிசிஐ அவற்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விலையை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டது.
முதலில் இந்த ஏலத்தில் 22 நிறுவனங்கள் பங்கு பெற இருந்த நிலையில் இறுதியில் 10 நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. ஆரம்ப தொகை ரூ.2000 ஆக இருந்தது. ஏலத்தில் அகமதாபாத் அணியை ஆர் பி சஞ்சீவ் கோயங்கா குழுமம் ரூ.7096 கோடிக்கு ஏலத்தில் வாங்கி உள்ளது. அதைப் போல் இரேலியா நிறுவனம் லக்னோ அணியை ரூ.5166 கோடிக்கு வாங்கி உள்ளது.