திருப்போரூர் கந்தசாமி கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐ-போன் இனி முருகனுக்கே சொந்தம் என்று பாளையத்து அம்மன் பட பாணியில் அந்த கோயில் நிர்வாகம் கூறியுள்ளது.

சென்னையை அடுத்த திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு கடந்த மாதம் சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் காணிக்கை செலுத்த சென்றுள்ளார்.

அப்போது அவர் காணிக்கையுடன் தான் கையில் வைத்திருந்த ஐ-போனை கோயில் உண்டியலில் தவறவிட்டுள்ளார்.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்த அவர் தனது மொபைல் போனை எடுத்துத் தரும்படி கூறியுள்ளார்.

ஆனால் மாதம் ஒருமுறை தான் உண்டியல் திறக்கப்பட வேண்டும் என்பது கோயில் விதிமுறை அதனால் அடுத்ததாக உண்டியல் திறக்கும் போது தகவல் தருகிறோம் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து நேற்று அந்த கோயிலின் உண்டியல் திறக்கப்பட்டதை அடுத்து செல்போனை பெறுவதற்காக தினேஷ் திருப்போரூர் முருகன் கோயிலுக்கு வந்துள்ளார்.

ஆனால் கோயில் உண்டியலில் போட்டது முருகனுக்கே சொந்தம் என்று பாளையத்து அம்மன் பட பாணியில் கறாராக கூறிய கோயில் நிர்வாகத்தினர் ஐபோனை தர மறுத்துவிட்டனர்.

செல்போனில் முக்கியமான தரவுகள் ஏதும் இருந்தால் அதனை மட்டும் வாங்கி கொள்ளலாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

இதையடுத்து, ஏழுத்துப்பூர்வமாக எழுதிக் கொடுத்து விட்டு செல்போனில் உள்ள சிம்கார்டு மற்றும் மெமரி கார்டுகளை பெற்றுக் கொண்டு வந்துள்ளார் தினேஷ்.

இந்த ஐபோன் தற்போது கோயிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில் உண்டியல் அல்லது காணிக்கையாக பெறப்படும் பொருட்களை ஏலம் விடுவது பல கோயில்களில் நடைமுறையாக உள்ள நிலையில் திருப்போரூர் கோயில் நிர்வாகமும் அந்த ஐ-போனை பாதுகாப்பு அறையில் வைத்து வீணடிக்காமல் அதற்கு உரியவரிடமே அதற்கு ஈடான காணிக்கையை பெற்று அவரிடம் திருப்பி அளித்திருக்கலாம் என்று பக்தர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.