சென்னை: இந்தி தெரியாது என்பதால் ஓய்வு பெற்ற அரசு மருத்துவருக்கு வங்கி கடன் தர மறுத்த அரியலூர் மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் பொதுத்துறை வங்கியின் கிளை உள்ளது. ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியம் என்பவர் 18 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளராக இருக்கிறார்.

தமக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்ட வங்கிக் கடன் உதவி கோரி விண்ணப்பித்து இருக்கிறார். ஆனால் இந்தி தெரியாது என்பதால் கடன் தர வங்கி மேலாளர் விஷால் மறுத்ததாக புகார் எழுந்தது.

இந்த விவகாரம் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இந்தி தெரியுமா என்று கேட்ட வங்கி மேலாளருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன.

இந் நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் நடந்து கொண்ட மேலாளர் விஷால் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சிக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்ட அவர், உடனடியாக பணியில் சேருமாறு உத்தரவிடப்பட்டு உள்ளது.