டில்லி:

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. கைது செய்ய டில்லி உயர்நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே டில்லி பாட்டியாலா கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தற்போது  டில்லி உயர்நீதி மன்றமும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய நிதி  அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாக  ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்தின் அட்வான்டேஜ் கன்சல்டிங் நிறுவனம் ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்துக்கும் தொடர்பு இருப்பதாக சிபிஐ தரப்பில் குற்றச்சாட்டு கூறியிருந்தது.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைக்கு நேரில் இன்று (மே 31-ம் தேதி) ஆஜராகும்படி சிபிஐ தரப்பில் இருந்து  ப.சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதை எதிர்த்து, ப.சி. சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தி முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை பரிசீலித்த டில்லி உயர்நீதி மன்றம், சிதம்பரத்தை  ஜூலை 3-ம் தேதி வரை  கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

மேலும்  ப.சிதம்பரம் மனுவிற்கு பதில் அளிக்குமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 3ந்தேதிக்கு ஒத்திவைத்தது.

ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ஜூன் 5-ம் தேதி வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி பாட்டியாலா சிறப்பு நீதிமன்றமும் இடைக்கால தடை விதித்துள்ளது  குறிப்பிடத்தக்கது.