நடிகர் கார்த்தியின் உழவன் பவுண்டேசன், விவசாயிகளுக்கு பல்வேறு விசயங்களில் உதவிக்கரம் நீட்டி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வருடம்தோறும் சிறந்த விவசாயிகளை தேர்ந்தெடுத்து விருதும், ஒரு லட்ச ரூபாய் ஊக்கத் தொகையும் அளிக்கிறது.
இந்த 2022ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
இதில் கலந்துகொண்டு, நடிகர் சூர்யா பேசும்போது, “இது ரொம்ப முக்கியமான நிகழ்வு. குடும்பங்களுடன் பலர் வந்துள்ளீர்கள். உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு என் அப்பாத்தா ஞாபகம் வருகிறது எனக் கூறியவர் அப்பாத்தா..” என்ற சூர்யா, கலங்கிவிட்டார்.
ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவர், மீண்டும் பேசத்துவங்கினார்:
“கார்த்திக்கு இயற்கை மிகவும் பிடித்தமான ஒன்று. இயற்கையை மிக நெருக்கத்தில் வைத்து பார்ப்பார். இதையெல்லாம் பார்க்கும் போது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது. அகரம் அமைப்பு ஆரம்பித்தது போல், கார்த்தி அவருக்கு நெருக்கமான இயற்கை சார்ந்த ஒரு அமைப்பை உருவாக்கினார். அதனால் பல இடங்களுக்கு, பல கால்வாய்களுக்கு தண்ணீர் சென்றது. அதற்கு உறுதுணையாய் இருந்த சதீஷுக்கு நன்றி. அதில் சம்பந்தபட்ட அனைவருக்கும் நன்றி.
கடைக்குட்டி சிங்கம் மூலமாக கார்த்தி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ் விவசாயம் குறித்து பல கேள்விகளையையும், அதன் முக்கியத்துவத்தையையும் முன்வைத்தனர். அதனை தாண்டி என்ன செய்வதென்று தேடி கொண்டிருந்த போது, ஒரு 18 விஷயங்கள் தோன்றியது. பல அமைப்புகள் பல விஷயங்களை முன் வைத்தனர். இதனை தாண்டி பல விவசாய சங்கங்கள் கேட்ட ஒரே விஷயம் எங்களுக்கு குரலாய் இருங்கள் என்பதே. அதனால் தான் உழவன் அமைப்பு ஆரம்பிக்கபட்டது.
கார்த்திக்கு இருக்கும் பல வேலைகளை தாண்டி, இந்த வேலையை தொடர்ந்து செய்வதாய் எடுத்த முடிவு தான் உழவன் அமைப்பு. கல்வி பற்றிய விஷயங்கள் நாம் வளரும் போது நாம் பார்க்கும் காட்சிகளை வைத்து நமக்கு தோன்றுவது. 2006 முதல் தலைமுறை பட்டதாரிகள் இருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இன்னும் முதல் தலைமுறை பட்டதாரிகள் இருக்கிறார்களா என்பது எனக்கு கேள்வியாக இருந்தது. அதனால் தான் அகரம் அமைப்பு உருவானது.
முதல் படியை எடுத்துவைப்பது தான் கடினம். அது ஆரம்பித்தவுடன் பல வெற்றிகளை தேடி செல்லும். அகரம் ஆரம்பித்த பிறகு, அது பல மாணவர்களின் கனவுகளை நினைவாக்கியது. அது போல் உழவன் அமைப்பும் பெரும் வெற்றியை அடையும். அதற்கான வாழ்த்துகள்.
விவசாயத்திற்காகவும், கிராமத்திற்காகவும் நேரம் ஒதுக்காதது, குற்ற உணர்வாய் இருக்கிறது. அதை அவர்கள் வேலை என நினைப்பது தவறு. நம்மை பல விஷயங்கள் விவசாயத்தை தாண்டி கொண்டு போய்விட்டது. பலவற்றை கற்கும் நாம், உற்பத்தி பற்றி படிப்பதில்லை. அதை பற்றி தெரிந்துகொள்வதில்லை. எனது குழந்தைகளிடம் காய்கறிகள் கிடைக்கும் இடம் பற்றி கேட்டால் சூப்பர் மார்கெட் என இப்போது உள்ள தலைமுறை நினைக்கிறார்கள். நமது குழந்தைகளுக்கு விவசாயம் பற்றி அறிமுகம் செய்துவைக்க வேண்டும். அவர்கள் இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்வார்கள். அருகில் உள்ளவர்களிடம் பொருட்களை வாங்க முயற்சிப்போம். நாம் பொருள் வாங்கும் போது, அதில் விவசாயிகளுக்கு எவ்வளவு பணம் போகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். நாம் அனைவரும் அதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.
மரத்திற்கு உயிர் உள்ளது என்பதை நாங்கள் என் வீட்டின் வாயிலாகவே அறிந்துகொண்டோம். விவசாயிகள் அவர்கள் பெரிதாக சம்பாதிக்கவில்லை, அவர்கள் சம்பாதிக்கும் பணத்தை மீண்டும் அதில் போடுகிறார்கள். ஒரு முறை நானும் கார்த்தியும் பேசிக்கோண்டிருக்கும் போது மரங்களுக்கு உயிர் இருக்கிறது பேசினால் வளரும் இலைவிடும் என சொல்கிறார்களே அப்படியெல்லாமா இருக்கும் என அவனிடம் கேட்டேன். அப்புறம் கிண்டலாக அங்கிருந்த மரத்திடம் உன்னைவிட அவன் நல்லா வளர்கிறான் இலை விடுகிறான் நீயும் வர வேண்டியதுதானே என சொல்லிவிட்டு போய்விட்டேன்
ஆனால் கார்த்தி தினமும் அதனிடம் கட்டிப்பிடித்து பேசியிருக்கிறார் இன்று பக்கத்து மரத்தை விட அந்த மரம் பெரிதாக வளர்ந்துவிட்டது. மரங்களுக்கு உணர்வும் உயிரும் இருக்கிறது நாம் அவற்றை பாதுகாக்க வேண்டும்” என்றார் சூர்யா.