விசா மோசடி தொடர்பாக தேடப்படும் முன்னாள் பிரெஞ்சு தூதரக அதிகாரி ஷுபம் ஷோகீனின் உலகளாவிய சொத்துக்களைக் கண்காணிக்க இந்தியா விடுத்த கோரிக்கையின் பேரில் இன்டர்போல் முதல் வெள்ளி அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலகெங்கிலும் உள்ள உறுப்பு நாடுகளிடமிருந்து குறிப்பிட்ட தகவல்களைப் பெறுவதற்காக, இன்டர்போல் ஒன்பது வகையான வண்ண-குறியிடப்பட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறது.

உதாரணமாக, தப்பியோடியவரைத் தடுத்து வைப்பதற்கான சிவப்பு (ரெட் கார்னர் நோட்டீஸ்), கூடுதல் தகவல்களைப் பெறுவதற்கான நீலம், அடையாளம் தெரியாத உடல்களுக்கு கருப்பு மற்றும் காணாமல் போனவர்களுக்கு மஞ்சள் என வெவ்வேறு நிறங்களில் அறிவிப்புகளை வெளியிடுகிறது.
இதில், வெள்ளி அறிவிப்பு என்பது உலகெங்கிலும் உள்ள சட்டவிரோத சொத்துக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க இந்த ஆண்டு ஜனவரியில் இன்டர்போலால் அறிமுகப்படுத்தப்பட்ட வண்ண-குறியிடப்பட்ட அறிவிப்பாகும்.
இந்த முன்னோடித் திட்டத்தில் இந்தியா உள்ளிட்ட 51 உறுப்பு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை தொடரும் இந்த முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக, ஒவ்வொரு நாடும் ஒன்பது வெள்ளி அறிவிப்புகளை வெளியிடலாம்.
இத்தாலியின் வேண்டுகோளின் பேரில் ஏற்கனவே தனது முதல் வெள்ளி அறிவிப்பை வெளியிட்ட இன்டர்போல் தற்போது இந்தியாவின் வேண்டுககோளை ஏற்று அதன் முதல் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
டெல்லியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தில் பணியாளர் விசாக்கள் மற்றும் உள்ளூர் சட்ட அதிகாரி ஷோகீனுக்கு எதிராகவும், அமலாக்க இயக்குநரகத்தால் தேடப்படும் அமித் மதன்லால் லகன்பால் மீதும் இரண்டு வெள்ளி அறிவிப்புகளை வெளியிட இன்டர்போலிடம் இந்தியா கோரிக்கை வைத்தது.
இந்தியாவின் கோரிக்கையை ஏற்று இன்டர்போல் இரண்டு வெள்ளி அறிவிப்புகளை விரைவாக வெளியிட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
“ஷோகீன் செப்டம்பர் 2019 முதல் மே 2022 வரை மற்ற குற்றவாளிகளுடன் சதி செய்து, ஒவ்வொருவரிடமிருந்தும் ரூ.15 லட்சம் முதல் ரூ.45 லட்சம் வரை சட்டவிரோதமாக பணம் வசூலித்து விண்ணப்பதாரர்களுக்கு ஷெங்கன் விசா வழங்க உதவினார்,” என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
லகன்பால் தனது சொந்த நிதி ஆதாயங்களுக்காக இந்தியாவில் அங்கீகரிக்கப்படாத எம்டிசி என்ற கிரிப்டோகரன்சியை உருவாக்கியதாகக் கூறப்படுகிறது. “அவர் முதலீட்டாளர்களை எம்டிசியில் முதலீடு செய்ய கவர்ந்து அவர்களிடமிருந்து சுமார் ரூ.113.10 கோடி நிதி வசூலித்தார்” என்று அது கூறியது.