ஏவாளின் ஒரு அடி….
பா. தேவிமயில் குமார்
*லட்சிய பாதையில்
நடப்பவள் நீ…
அவதூறு வார்த்தையை
அலட்சியம் செய்திடு!!
*நேர் கோட்டில்
நடந்திடும் உனக்கு,
இடையூறுகள்
வரத்தான் செய்யும்….
தொடர்ந்து செல்!
*சருகுகள் சல சலத்து கொண்டே இருக்கும்….
நீ … வேர்!
நீண்டு கொண்டே இரு!
*எரி கற்களை எங்கே விழுந்ததென தேடுவர்..
நீயோ.. வெய்யோ(ள்)ன்…
வீரிய வெளிச்சம் கொடு!!
*சல சலக்கும் ஆறுகள்
சங்கமிக்கும்
நதியின் கடல் ஆழம் நீ…
உனக்கு நிகர் நீயே!!
*பள்ள த்தாக்குகள்
எங்கும் இருக்கும்,
உச்சி மலை நீ
என்பதை மறவாதே!!
*எதிரொலி கொடுக்க நீ…யாரின் நகலுமில்லை…
நீ.. சுயம்பு என
எப்போது அறிவாய்?
*சிறு குட்டையில்
தேங்கி நிற்காதே!
நீ… வான் மழை என
நினைவில்லையா??
*ஜன்னல் கதவை
திறந்திட நடுங்கி நிற்கிறாய்?
நீ சூறாவளி என்பதை மறந்தாயா?
*பூனையாக உன்னை
மாற்றிய சமூகத்திடம்..
நீ…புலி என்பதை
நினைவூட்டு!!
*வீதியில் காலடி
எடுத்து வைக்க
ஏன் தயக்கம்?…
நிலவுக்கு செல்ல
தகுதி பெற்றவள் நீ!!
*அடுத்தவரிடம்
மண்டியிட்டு
உரிமைகளை
கேட்காதே!
சாசனம் எழுதுவது நீயாக இரு!!
*எதற்கு பயம்….
யாரை பார்த்து பயம்?
இந்த உலகமே உன்னிடம் தைரியம்
கற்க வரிசை கட்டி
நிற்கிறதே!
*ஏவாள்களை ஏவல் செய்ய மட்டுமே பழக்கிய
அவர்களுக்கு….
உன் ஒரு அடி முன்னேற்றம் ….கூட,
இனி சம்மட்டி அடிதான்!!
*புறப்படு பெண்ணே, புயலாக,…
புதிய உலகம்
உனக்காக …
புடமிட்டு காத்திருக்கிறது!!
பெண்கள் தின நல் வாழ்த்துக்கள்💐💐🧚♂️🧚♂️
08.03.2025
கவிஞர்.பா.தேவிமயில் குமார்