டெல் அவிவ்
இஸ்ரேல் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு சர்வதேச ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் இதற்குப் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த சண்டையில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டு வருகின்றனர்.
இஸ்ரேல் நாட்டின் வான்வெளி தாக்குதல் லெபனான் மீதும் நடத்தப்பட்டது. சிரியாவின் 2 விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடந்ததில் லெபனானில், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் வீடியோ நிருபரான இசாம் அப்துல்லா என்பவர் கொல்லப்பட்டார்.
அவர் இஸ்ரேலிய படைகள் மற்றும் லெபனான் பயங்கரவாத அமைப்பான ஹிஜ்புல்லா இடையேயான சண்டையில் கொல்லப்பட்டுள்ளார். இதைத் தவிர பத்திரிகையாளர்கள் 6 பேர் காயமடைந்துள்ளனர். இதற்குச் சர்வதேச ஊடக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
அல் ஜசீரா ஊடகம் இது குறித்து
”இஸ்ரேல் பீரங்கியின் குண்டுவீச்சு தாக்குதலாலேயே அப்துல்லா கொல்லப்பட்டார். பத்திரிகையாளர்கள் என்பதற்கான மேலாடையை அணிந்திருந்தபோதும், பல்வேறு நிருபர்கள் மீது இஸ்ரேல் படைகள் ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தி உள்ளன.
உலகம் முழுவதும் உள்ள பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு இரங்கல்களைத் தெரிவித்து கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறோம்”
எனத் தெரிவித்துள்ளது.
தாக்குதலில் அல் ஜசீராவின் 2 நிருபர்கள் காயமடைந்து உள்ளனர். தவிர ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் செய்தி நிறுவனம் தன்னுடைய 2 நிருபர்கள் தாக்குதலில் காயமடைந்து உள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.