சென்னை: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் – திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விதி 110ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் மற்றும் திருச்சியில் ‘கலைஞர் நூலகம்’ அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
சட்டசபையில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரைற்றினார். அப்போது, தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. 2022-ம் ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழ்நாடு நம்பர்-1 மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. உலக முதலீட்டாளர்களை தமிழ்நாடு தொடர்ந்து ஈர்த்து வருகிறது.
தமிழ்நாட்டின் உட்கட்டமைப்புக்கு அடித்தளம் அமைக்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன.
தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்க வந்து கொண்டு இருகின்றன. இதனால் இளைஞர்களுக்கு வேலைவாய்பு கிடைக்கிறது.
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு, ஏற்றுமதி, மோட்டர் வாகனம், தோல் பொருட்கள் உள்ளிட்டவை அதிகரித்துள்ளது.
ஓசூர் நகரத்திற்கான பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு அது நிறைவடையும் நிலையில் உள்ளது. பொருளாதார வளர்ச்சி மையமாக ஓசூரை உருவாக்க பல்வேறு கட்டமைப்புகள் செயல்படுத்தப்படுகின்றன.
கிருஷ்ணகிரி, தர்மபுரியில் ஒட்டுமொத்த சமூக, பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் திட்டங்கள் வகுக்கப்படுகின்றன.
ஓசூரில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும். ஆண்டுக்கு 3 கோடி பயணிகள் வந்து செல்லும் வகையில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது.
மதுரை, கோவையை தொடர்ந்து திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும்.
கோவையில் நூலகம் மற்றும் அறிவியல் மையம் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்