இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற இறுதி ஒருநாள் போட்டியில், ஹர்திக் பாண்ட்யா தொடர்பான சில சுவாரஸ்யங்கள் நிகழ்ந்துள்ளன.

முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில், ஹர்திக் பாண்ட்யாவிற்கு ஒரு ஓவரைக்கூட விராத் கோலி கொடுக்கவில்லை. இரண்டாவது ஒருநாள் போட்டியின்போது, அதிக தேவையிருந்தும்கூட ஹர்திக் பாண்ட்யாவிடம் ஓவரைக் கொடுக்காதது கடும் விமர்சனங்களை உருவாக்கியது.

எனவே, மூன்றாவது ஒருநாள் போட்டியில், கருணால் பாண்ட்யாவை ஓவர்கொடுக்காமல் ஓரங்கட்டிவிட்டு, ஹர்திக் பாண்ட்யாவை பயன்படுத்தினார் விராத் கோலி.

நேற்று மட்டும் 9 ஓவர்கள் வீசினார் ஹர்திக். நேற்று பீலிடிங்கின்போது, பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கர்ரன் ஆகியோர் அடித்த கேட்ச்களை நழுவவிட்டார். இதில், பென்ஸ்டோக்ஸ் கேட்ச்சை விட்டது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 35 ரன்களுக்கே இன்னொரு கேட்சில் வெளியேறிவிட்டார் ஸ்டோக்ஸ்.

ஆனால், சாம் கர்ரனுக்கு விட்ட ஒரு கேட்ச்தான் மிகப்பெரிய பாதிப்பை இந்தியாவுக்கு ஏற்படுத்திவிட்டது. வெறும் 20+ ரன்களிலிருந்த சாம் கர்ரனுக்கு விடப்பட்ட கேட்ச், அணியை கிட்டத்தட்ட தோல்விக்கு மிக அருகில் எடுத்துச்சென்று விட்டது.

இப்படியாக, பாண்ட்யா 2 ‍கேட்ச்களை கோட்டைவிட்ட நிலையில், அவர் வீசிய 49வது ஓவரில் 2 கேட்ச்கள் விடப்பட்டன என்பதும் கவனிக்கத்தக்கது. முதல் கேட்ச்சை தவறவிட்டவர் ஷர்துல் தாகுர். இரண்டாவது கேட்ச்சை தவறவிட்டவர் நடராஜன். இவை இரண்டுமே எளிதான கேட்ச்சுகள். இந்த கேட்ச்கள் பிடிக்கப்பட்டிருந்தால், கடைசி ஓவர் டென்ஷன் இல்லாமல் போயிருக்கலாம்.

கேட்ச்கள் விடப்படுவதென்பது கிரிக்கெட்டில் அடிக்கடி நடப்பதுதான். ஆனால், 2 கேட்ச்கள் விட்டவருக்கு, அவரின் ஓவரிலேயே பதிலடியாக 2 கேட்ச்கள் விடப்பட்டது ஒரு எதிர்பாராத சுவாரஸ்யமே..!

‍நேற்று இந்திய அணியின் கடைசிக்கட்ட பதற்றம், தென்னாப்பிரிக்க அணியை அப்படியே கண்முன் கொண்டுவந்தது.