பெங்களூரு
கர்நாடக மாநில இஸ்லாமிய மாணவிகளுக்கு ஹிஜாப் அணிந்து கல்லூரி வர விதிக்கப்பட்ட தடையை எதிர்க்கும் வழக்கில் மாணவிகளுக்கு ஆதரவாக ருசிகர வாதம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிகளுக்கு வர இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அரசு சார்பில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளனர்.
இதில் மாணவிகளுக்கு ஆதரவாக வாதிடும் ரவிவர்ம குமார் என்னும் மூத்த வழக்கறிஞர்,
“கர்நாடக மாநில அரசு ஹிஜாப் தடை மூலம் இஸ்லாமிய மாணவிகளுக்கு அவர்களுடைய மதம் காரணமாக கடும் அநியாயம் இழைத்துள்ளது. கர்நாடக அரசு ஹிஜாப் உள்ளிட்ட எவ்வித மதச் சின்னமும் அணிந்து கல்வி நிலையங்களுக்கு வரக்கூடாது என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது ஆகும்.
ராணுவத்தில் அனைவரும் சமம் எனக் கூறப்படுகிறது. ஆனால் சீக்கியர்கள் தொப்பிக்குப் பதில் டர்பன் அணிந்து பணிபுரிய அனுமதிக்கப்படுகிறது. அப்படி இருக்கக் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்த மாணவிகளை அனுமதிக்க ஏன் அரசு மறுக்கிறது? கல்வி விதிகளின்படி ஹிஜாப் அணிவது எந்த இடத்திலும் தடி செய்யப்படவில்லை.
மேலும் அனைவரும் சமம் என்பதற்காகச் சீருடைகள் அணிவது கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது. ஆனால் அரசு கல்லூரிகளில் எவ்வித சீருடை விதிகளும் அமலில் இல்லை. எனவே கல்வி விதிகளின் படியும் மேலும் கல்லூரி விதிகளின் படியும் கல்லூரி மாணவ மாணவிகளுக்குச் சீருடை எதுவும் அறிவிக்கப்படவில்லை”
எனத் தனது வாதத்தில் தெரிவித்துள்ளார்.