சியோல்:
கொரிய தீப கர்பத்தில் நிலவி வந்த பதற்றம் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. வடகொரியாவும், தென் கொரியாவும் இணைந்து சுமூக தீர்வை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றது. இந்த வகையில் வரும் 27ம் தேதி வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் தென் கொரியா அதிபர் மூன் ஜே ஆகியோர் நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். தென் கொரியாவின் மன்முஞ்ஜோம் என்ற கிராமத்தில் இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் போது சுவிட்சர்லாந்து உணவு வகைகளை பரிமாற தென் கொரியா முடிவு செய்துள்ளது. வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் சுவிட்சர்லாந்தில் பல ஆண்டுகள் தங்கி பள்ளி படிப்பை மேற்கொண்டார். இதனால் அவருக்கு அந்நாட்டு உணவு வகைகள் மீது அதிக பிரியம். இதன் காரணமாக 27ம் தேதி நடக்கும் சந்திப்பின் விருந்தில் சுவிஸ் உணவு வகைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.
உணவு அட்டவணையில் சுவிட்சர்லாந்தின் வறுத்த உருளைகிழங்கு டிஷ் ரொட்டி முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மூன் ஜே சொந்த ஊரில் தயாராகும் மீன் மற்றும் சாதம் இடம்பெற்றுள்ளது. அதோடு வட கொரியாவின் குளிர்ந்த நூடுல்ஸ் இரவு உணவுக்கு தயாராகவுள்ளது.
சுவிஸ் சாக்லேட்கள், மகரூன்ஸ், சீஸ் கேக் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. கேக் அலங்காரத்தில் ‘சுவிஸ் நினைவுகள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இதில் மாம்பழ மவுஸி மூலம் அலங்கரிக்கப்பட்டு நீல நிற வரைபடம் இடம்பெற்றுள்ளது. இது கொரிய நாடுகளின் ஒற்றுமையை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலங்காரத்தில் ஒரு புள்ளியும் இடம்பெற்றுள்ளது. அது தென் கொரியா, ஜப்பான் இடையில் ஒரு குட்டி தீவு தொடர்பாக பிரச்னை உள்ளது. அதை குறிக்கும் வகையில் இந்த புள்ளி இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு இரு அதிபர்களுக்கும் இடையே 3வது முறையாக நடக்கிறது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை திட்டங்களால் 10 ஆண்டுகளுக்கு பின்னர் இரு நாடுகளும் தங்களது உறவை மீண்டும் புதுப்பிக்கவுள்ளது. 1950-53ம் ஆண்டுகளில் நடந்த கொரியன் போர் எவ்வித சமரசமும் இன்றி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் இரு நாடுகளும் போருக்கான ஆயத்தை நிலையிலேயே இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை நடந்த பேச்சுவார்த்தையின் போது மூன் ஜேய் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினருக்கு வடகொரியா அதிபர் கிம் விருந்தளித்தார். அப்போது ஒயின் மற்றும் விதவிதமான சீஸ்கள் பரிமாறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.