கூடங்குளம்
தொடர்ந்து 2 ஆம் நாளாக கூடங்குளம் அணு மின் நிலையத்தில் பாறை இடுக்கில் சிக்கிய மிதவைக் கப்பலை மீட்கும் பணி நடந்து வருகிறது.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தலா 1,000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடந்து வருகிறது. இங்கு மேலும் 4 அணு உலைகள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து இதில் 3, 4-ம் அணு உலைக்கான பணிகள் இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ளது. மேலும் 4, 5-ம் அணு உலைக்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
அணு உலைகளில் பயன்படுத்தப்படும் 2 நீராவி ஜெனரேட்டர் எந்திரங்கள் ரஷ்யாவில் இருந்து கடல் மார்க்கமாக தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த. பின்னர் அங்கிருந்து மிதவை கப்பலில் 2 நீராவி ஜெனரேட்டர்களும் ஏற்றப்பட்டன. இழுவை கப்பல் மூலம் அதை இழுத்தபடி கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள சிறிய துறைமுகத்துக்குக் கொண்டு வந்தனர்.
இது கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு நாட்டிக்கல் மைல் தொலைவில் வந்தபோது, திடீரென மிதவை கப்பலுக்கும், இழுவை கப்பலுக்கும் இடையேயான இணைப்பு துண்டிக்கப்பட்டு மிதவை கப்பல் கடல் அலையில் அடித்து செல்லப்பட்டு, அங்குள்ள பாறையில் தட்டியபடி நிற்கிறது. இதற்கான மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன
இன்று 2 ஆம் நாளாக மிதவை கப்பலை மீட்கும் பணியில் அணுமின் நிலைய ஊழியர்கள், தனியார் ஒப்பந்த நிறுவனத்தினர் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பலூன் டெக்னாலஜி மூலம் பாறை இடுக்கில் இருந்து கப்பலை இழுக்க முயல்வது, மேலும் ஒரு இழுவை கப்பலைக் கொண்டு, உதிரிப் பாகங்களை மாற்ற முயல்வது மற்றும் சிக்கியுள்ள கப்பலில் நீர் நிரப்பி சமன்படுத்தி, நீர்மட்டம் உயரும் வரை காத்திருந்து மீட்பது என 3 விதமான பரிந்துரைகளை வல்லுநர் குழு வழங்கியுள்ளனர்.