அறிவுசார் சமூகத்திற்கு உண்மையை உரக்கச் சொல்லவேண்டிய கடமை உள்ளது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி எம்சி சக்லா 6 வது நினைவு தின விழாவில் பேசிய நீதிபதி சந்திரசூட், சமூக, அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் தற்போதைய சூழலில் மருத்துவம் குறித்த உண்மைகளை அரசாங்கம் வழங்குவதாக அதிக நம்பிக்கை கொள்ளவேண்டாம் என்று எச்சரித்தார்.

பொய்களை வெளிப்படுத்த வேண்டிய கடமை பொதுவாழ்வில் உள்ள அறிவார்ந்தவர்களுக்கு உள்ளது. அதிகாரத்தை கையில் வைத்திருக்க சர்வாதிகார அரசுகள் தொடர் பொய்களை நம்பியிருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அரசின் செயலையும் கொள்கையையும் கேள்விகேட்க அதன் பொறுப்பை உணர்த்தக்கூடிய அரசியல், பொருளாதாரம் என்று எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாத பத்திரிக்கைத் துறையின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

கொரோனா தரவுகளின் உண்மை தன்மை குறித்து கேள்வி எழுந்துவரும் நிலையில், நீதிபதி சந்திரசூட் இவ்வாறு பேசியிருப்பதாகத் தெரிகிறது.

கோவிட்-19 குறித்த தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் அதிகப்படியாக பரவி வருவதை உலக சுகாதார அமைப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கூறியிருந்ததைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களின் உண்மை தன்மை கேள்விக்குரியதாகவே உள்ளது” என்று கூறினார்.

மேலும், உண்மைத் தகவல் எதுவென்று எதிர்தரப்பு தெரிவித்த பின், இதை உணர்த்தவே அந்த தகவல் தரப்பட்டதாக மற்றொரு தரப்பும் கூறுவது வழக்கமான ஒன்றாகிப் போனதால் உண்மையை கூறுவது யார் என்ற குழப்பத்தையும் ஏற்படுத்துகிறார்கள் என்று கூறினார்.

போலிச் செய்திகளை எதிர்கொள்ளும் வகையில் அரசுத் துறை வலுவானதாக இருக்க வேண்டும். நடுநிலையான தகவல்களை வழங்கும் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாத சுதந்திரமான பத்திரிக்கைகளின் தேவையையும் வலியுறுத்தினார்.

உண்மைத் தகவல் மற்றும் பொய் செய்திகளை பிரித்துப் பார்க்கக்கூடிய மற்றும் அரசாங்கத்தைக் கேள்வி கேட்கக் கூடிய கல்வியை நமது மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்றும் இந்நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சந்திரசூட் கூறினார்.