சென்னை:

கொரோனா பரிசோதனைக் கருவியான ரேபிட் கிட் வாங்கியில் நடைபெற்றுள்ள ஊழல், ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய வயநாடு எம்.பி.யுமான ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார்.

கொரோனா நோய் கண்டறியும் ரேபிட் கருவி சீனாவில் இருந்து வாங்கியதில் மாபெரும் ஊழல் நடைபெற்றுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.  400 ரூபாய் மதிப்புள்ள ரேபிட் கிட் கருவியை இந்திய அரசு ரூ.600க்கு வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. டெல்லி உயர்நீதி மன்றமும் ஒரு ரேபிட் கிட் கருவி ரூ.400க்கு மட்டுமே வாங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

இந்த மாபெரும் ஊழல் குறித்து எதிர்க்கட்சிகள் மத்தியஅரசை கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில்,  இந்த ஊழல் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக  அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், கொரோனாவால் தங்களது லட்சகணக்கான சகோதர சகோதரிகள் சொல்லிலடங்கா துன்பங்களை அனுபவித்து வரும் வேளையில், இந்த சூழ்நிலையிலும் ஒருவர் லாபமீட்டும் நடவடிக்கையில் ஈடுபடுகிறார் என்பது நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக உள்ளது.

இந்த ஊழல் ஒவ்வொரு இந்தியனுக்கும் அவமானம். இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து தவறு செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று பிரதமரை நான் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில்  பதிவிட்டுள்ளார்.