சென்னை
காவிரியில் வரும் உபரிநீரைச் சேமிக்க முடியாத தமிழக முதல்வர் இஸ்ரேல் நாட்டுக்கு செல்வது ஏன் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
புதிய முதலீட்டுக் கோரி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தற்போது நீர் சேமிப்பு குறித்து ஆய்வு நடத்த இஸ்ரேல் நாட்டுக்கு செல்ல உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளுக்கு கடும் கண்டனத்தை எழுப்பி உள்ளது. இது குறித்து திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மு க ஸ்டாலின், வெளிநாடுகளில் இரண்டு வாரச் சுற்றுலா முடித்து, சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியவுடன் நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்குச் செல்கிறேன் என்று பேட்டியளித்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொள்ளிடம் ஆற்றிலிருந்து கடலில் கலந்து வீணாகும் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் பற்றி கவலைப்படாதது மிகுந்த வேதனையளிக்கிறது. தற்போது கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக மேட்டூருக்கு வந்துள்ள காவிரி நீர், இன்னும் காவிரி டெல்டாவில் பல இடங்களில் கடைமடைக்குப் போய்ச் சேரவில்லை.
முந்தைய திமுக ஆட்சியில் முதன்முதலாகச் செயல்படுத்தப்பட்ட காவிரி கால்வாய் தூர்வாரும் திட்டத்தையும் இந்த அ.தி.மு.க அரசு கைவிட்டு கமிஷன் பெறுவதற்காக மட்டுமே தூர்வாருகிறோம் என்ற பெயரில் நிதி ஒதுக்கி உள்ளார்கள். கடந்த வருடம் மட்டும் கொள்ளிடத்தில் 100 டி.எம்.சி.க்கு மேல் தண்ணீர் கடலில் வீணாகப் போய் கலந்தது. அதைப்போல் இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் கலந்து கொண்டிருக்கிறது.
விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்பட வேண்டிய தண்ணீர் இப்படி பயனற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த போது கொள்ளிடத்தில் 6 டி.எம்.சி. நீரை தேக்கி வைக்க நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு இடையில் 480 கோடி ரூபாயில் கதவணை மற்றும் தடுப்பணை கட்டும் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார். ஆனால் அந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு ஐந்து வருடங்களுக்கு மேலாகியும், பல அறிவிப்புகளுக்கு நேர்ந்த கதி இதற்கும் ஏற்பட்டு, தடுப்பணைகள் கட்டப்படவில்லை.
ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு ஓரிடத்தில் கொள்ளிடம் ஆற்றில் அந்தப் பக்கம் இருக்கும் குடியிருப்புகளுக்கு பாதிப்பு வராத வகையில் தடுப்பணைகள் கட்டுவதற்கு எந்த தடையும் இல்லை. அவ்வாறு கட்டுவதற்கான தொழில்நுட்பங்கள் அறிந்த பொறியாளர்கள் தமிழகப் பொதுப்பணித்துறையில் உள்ளனர். முதல்வருக்கு அதுபற்றியோ, கடலில் கலக்கும் காவிரி நீரை உரிய வகையில், வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்படுத்த தொலைநோக்கு திட்டங்களை நிறைவேற்றுவதிலோ எவ்வித அக்கறையும் ஆர்வமும் இல்லை.
மூச்சுக்கு முந்நூறு முறை நானும் ஒரு விவசாயி என்று சொல்லிக் கொண்டே விவசாயிகளுக்கு சாதகமான திட்டங்களை படுகுழியில் தள்ளி மண்ணைப் போட்டு மூடுவதிலேயே முதலமைச்சர் கவனமுடன் செயல்பட்டு வருகிறார். அது மட்டுமின்றி குடிமராமத்துப் பணிகள் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் கமிஷன் அடிக்கும் பணியாக நடைபெற்று வருகிறது. இந்த ஊழலுக்கு உடன்படாத பொறியாளர்கள் பழிவாங்கப்படுகிறார்கள்.
அரசு இந்த லட்சணத்தில் இருக்கும் போது நீர் சிக்கனம் பற்றி எடப்பாடி பழனிசாமி பேசுவதைப் பார்த்து, பொதுப்பணித்துறையில் உள்ளவர்கள் மட்டுமல்ல – பொதுமக்களும் எள்ளி நகையாடுகிறார்கள். காவிரி ஆற்றில் உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் – கடலில் கலக்க அனுமதித்து விட்டு, உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக இஸ்ரேல் போகிறேன் என்பது வேடிக்கை மிகுந்த வினோதமாக இருக்கிறது. எனவே, மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது விரைந்து நிறைவேற்றிட எடப்பாடி பழனிசாமி முன்வந்திட வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.