கலிஃபோர்னியா
இன்ஸ்டாகிராம் தளத்தில் வரும் கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் நீக்கப்பட்டு வருகின்றன.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைத் தளங்களில் பல செய்திகள் பகிரப்பட்டு வருகின்றன. குறிப்பாக வைரஸ் தொற்று எவ்வாறு ஏற்படுகிறது, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், இது குறித்து அணுக வேண்டிய அலுவலகங்கள், தொலைப்பேசி எண்கள் போன்ற முக்கியமான பல தகவல்கள் பகிரப்படுகின்றன. அவற்றில் சில தவறான தகவலாகவும் உள்ளன.
முகநூலின் துணைத் தளமான இன்ஸ்டாகிராம் பலருடைய விருப்பத்தைப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் பயனாளிகள் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைப் பகிர்ந்து வருகின்றனர். பிரபலங்கள் முதல் சாமானியர் வரை பலரும் இதை பயன்படுத்தி வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் நிர்வாகம் தற்போது கொரோனா வைரஸ் குறித்த தவறான தக்வலகளை நீக்க நடவடிக்கைகள் எடுத்துள்ளது. இது குறித்த அனைத்து தவறான தகவல்களையும் சோதித்து அவற்றை முழுமையாக நீக்கப்பட உள்ளது, இந்த நடவடிக்கைகள் மூலம் தவறான தகவல்கள் நீக்கப்படுவது மட்டுமின்றி சரியான தகவலுக்கான உலக சுகாதார மையத்தின் லின்குகள் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு பயனாளி இன்ஸ்டாகிராமில் கொரோனா வைரஸ் குறித்துத் தேடும் போது அந்த தகவல் எந்த தளத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதும் அது குறித்த உலக சுகாதார அமைப்பின் தகவல்களும் உடன் வருமாறு அமைக்கபட்டுள்ளது. ஏற்கனவே இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான முகநூல் கொரோனா குறித்த தவறான தகவல் அளிப்போரின் கணக்குகள் நீக்கப்படும் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.