டாக்கா: வங்கதேச தந்தை எனப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இம்மாதம் 17ம் தேதி, வங்கதேச தலைநகர் டாக்காவிலுள்ள அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறவிருந்தது அந்த பிரமாண்ட விழா. ஆனால், அந்நாட்டில் கோவிட்-19 எனப்படும் கோரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் கண்டறியப்பட்டதால், மக்கள் நெருக்கமாக கூடுவது நல்லதல்ல என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எனவே, முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா ரத்துசெய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, சில நாட்களுக்குப் பிறகு ஒரு சிறிய நிகழ்ச்சி நடத்தப்படும் என்றும், மக்கள் பெரிதாக கூடாத வகையில், ஆண்டுமுழுவதுமான கொண்டாட்டங்கள் இடம்பெறும் என்றும் அந்நாட்டு அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரமாண்ட விழாவில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்துகொள்வதாய் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசினா தலைமையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.