சென்னை: “தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் விரைவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, அதற்கான தேவை பூர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என சட்டப்பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் கூறினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2024ம் ஆண்டுக்கான கூட்டத் தொடர், கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று 4வது நாள் அமர்வின் கேள்வி நேரத்தின்போது, கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியின் அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜு, தமிழகம் முழுவதுமே உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு பாதுகாப்பான சுற்றுச்சூழல் இல்லை எனவும், இது குறித்து தமிழக அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்த சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், உறுப்பினரின் கோரிக்கையான அங்கன்வாடி மையங்களில் பாதுகாப்பான சுற்றுச்சுவர் கட்டுவது என்பது விரைவில் கட்டித் தரப்படும் என பதிலளித்தார்.
மேலும், இதற்கு முன்பு பேசிய மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, மொடக்குறிச்சியில் இயங்கி வரும் பல அங்கன்வாடி மையங்களில் சரியான குடிநீர் வசதிகள் இல்லை என்றும், கழிவறை வசதி மற்றும் சுற்றுசுவர் என எந்தவித வசதியும் இல்லை என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதாஜீவன், மொடக்குறிச்சி தொகுதியில் எந்தெந்த பகுதியில் அங்கன்வாடி மையங்களில் தேவை இருக்கிறது என குறிப்பிட்டுக் கூறினால், அந்த அங்கன்வாடி மையங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.