சென்னை: பொதுமக்கள் பொதுஇடங்களில் மாஸ்க் அணிவதை வலியுறுத்தும்படியும்,  தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்துங்கள் என  மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும் பொதுஇடங்களில் கூடும்போது மக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்றும், இதுவரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள், 2வது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளாதவர்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 50 முதல் 100க்கு உள்ளது. நேற்று 56 பேருக்கு தொற்று உறுதியானது. தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக சென்னையில் 33 பேருக்கும், செங்கல்பட்டில் 15,கோவையில் 3 பேருக்கும், காஞ்சிபுரம் 5 மற்றும் திருவள்ளூர் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. இதையடுத்து,  தமிழ்நாட்டில் கொரோனா கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அனுப்பி உள்ள சுற்றறிக்கை யில்,  ‘சென்னை, காஞ்சிபுரம் , திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையில் அடையாறு, தேனாம்பேட்டை, அண்ணா நகர், பெருங்குடி, கோடம்பாக்கம் மண்டலங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. சில குறிப்பிட்ட நிறுவனங்களிலும் கொரோனா தொற்று பரவல் அதிக அளவில் காணப்படுகிறது.
சில குடும்ப நிகழ்ச்சிகளில் தோற்றாளர்களால் கொரோனா பரவும் நிலை உருவாகி உள்ளது. கொரோனா பரவலை தீவிரமாக கண்காணிக்கா விடில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொரோனா அதிகரித்தாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இணை நோய் உள்ளவர்களும் முதியவர்களும் அதிக அளவில் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள். ஆகவே லேசான அறிகுறிகள் இருந்தாலும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும்.

பொது இடங்களில் மக்கள் தவறாமல் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும்.தடுப்பூசிக்கு பிறகு நோய் எதிர்ப்புத் திறன் குறைந்து வருவதை தொற்று அதிகரித்து வருவது காட்டுகிறது. தமிழ்நாட்டில் 93.74% பேர் முதல் தவணை, 82.55% மக்கள் 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.43 லட்சம் பேர் இன்னும் முதல் தவனையும் 1.22 கோடி பேர் 2வது தவணை தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளவில்லை.இன்னும் தடுப்பூசி போடாதவர்களை தடுப்பூசி போட அறிவுறுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடுகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.