லக்னோ:

உ.பி.யில் நடந்த கோராக்பூர் மற்றும் புல்பூர் லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்தனர். தற்போதைய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், துணை முதல்வர் ஆகியோரது சொந்த தொகுதிகளாகும்.

இந்நிலையில் இந்த தோல்விக்கு யார் காரணம்? என்று பாஜக.வினர் மத்தியில் பல விதமாக பேசப்படுகிறது. ‘மானானியா யோகி ஜி சிஎம் யுபி’ என்ற பெயரில் வாட்ஸ் அப் குழு ஒன்று செயல்படுகிறது. இதில் பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இடைத்தேர்தல் தோல்விக்கு காரணம் குறித்து இதில் நடந்து வரும் விவாதம்……

காரணம்1:

பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தான் தோல்விக்கு காரணம் என பல பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. யோகி கூறுவதை அவர்கள் கேட்கவில்லை. அவரை முடக்கும் ஆவலுடன் எடுக்கப்பட்ட நிலைப்பாட்டால் கட்சிக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. கோரக்நாத் பீத் செல்வாக்கால் தான் பாஜக உ.பி.யில் வெற்றி பெற்று வலுவான நிலையில் உள்ளது.

இதை அமித்ஷா நம்ப தவறிவிட்டார். பாஜக.வால் இந்த தொகுதி வெற்றி பெற்றது என்று அவர் நினைத்துவிட்டார். இப்போது தான் பாஜக.வை யோகி எப்படி இத்தகைய இடத்துக்கு கொண்டு வந்தார் என்பது புரியும் என்று பதிவுகள் வெளியாகியுள்ளது.

காரணம் 2:

ஒபிசி அல்லது எஸ்சி பிரிவை சேர்ந்தவர்கள் தான் 80 சதவீதம மக்கள் தொகை. இவர்களில் ஒருவரை முதல்வர் பதவியில் அமர வைக்காதது அதிருப்தியை ஏற்படுத்திவிட்டது. மாநில தலைவரும் பிராமணராக உள்ளார். இந்த அரசில் ஒபிசி, எஸ்சி.யினருக்கு மரியாதை இல்லை. அதோடு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யும் அறிகுறியும் தெரிய தொடங்கியது. இந்த தகவலை யோகியும், மோடியும் அறிந்து கொள்ளும் வகையில் அனைவரும் பகிர வேண்டும் என்று அந்த பதிவில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

காரணம் 3:

தாகூர் இன மக்கள் ஊக்குவிக்கப்படுவது பிராமணர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இது பிராமணர்களுக்கும், தாகூருக்கும் இடையே மோதலை உருவாக்கியுள்ளது. இதனால் பிராமணர்கள் பாஜகவுக்கு ஓட்டுபோடவில்லை. இதில் சிலர் சமாஜ்வாடிக்கு வாக்களித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரணம் 4:

சமாஜ்வாடி கட்சி புத்திசாலித்தனமாக ஜாதி கூட்டணியை அமைத்துவிட்டது. நிஷாத் கட்சில அமைதி கட்சி, இஸ்லாமியர்கள் கட்சி ஆகியவற்றுடன் கைகோர்த்துக் கொண்டது. ஜாதிக் கூட்டணி நிலைப்பாட்டில் பாஜக சிக்கிக் கொண்டுள்ளது. பகுஜன் சமாஜ் வாடி கட்சி பாஜகவுக்கு ஆதரவளித்தது. ஆனால், இதற்கு தயாராக நேரமில்லை என்ற ஆச்சர்ய பதிவும் இடம்பெற்றிருந்தது.

காரணம் 5:

தேர்வு நடக்கும் அறைகளில் சிசிடிவி கேமரா பொறுத்தப்பட்டதால் காப்பி அடிக்க முடியாத மாணவர்கள் கோபத்தில் உள்ளனர். ஆசிரியர்களை வகுப்பறையில் கண்காணிக்க கேமரா இல்லை. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கவில்லை. அரசு உறுதி அளித்தபடி லேப்டாப் வழங்கவில்லை. அதனால் இந்த 2 தொகுதிகளிலும் அவர்கள் பாஜக.வுக்கு ஓட்டு போடவில்லை என்றும் பதிவுகள் இடம்பெற்றது.

காரணம் 6:

சாதாரண பாஜக தொண்டர்கள் கூறுவதை உ.பி. அரசு அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் கேட்பதில்லை. கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுவதை தான கேட்கிறார்கள். இதனால் கட்சியினர் அதிருப்தியில் இருந்தனர். இதன் காரணமாக வாக்காளர்களை அவர்கள் ஒருங்கிணைக்கவில்லை. மக்கள் பிரச்னைகளை தீர்க்காமல் அச்சுறுத்தும் செயல்களில் அதிகாரிகள் ஈடுபட்டனர் என்றும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தது.

காரணம் 7

இந்துத்வா கொள்கைகளை சமரசம் செய்து கொண்டது தான் தோல்விக்கு காரணம் என்று விஹெச்பி தலைவரின் அறிக்கை வெளியான நாளிதழின் செய்தி ஒரு பதிவில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. ராமர் கோவில் விவகாரத்தை எதிர்த்த சமாஜ்வாடி தலைவர் நரேஷ் அகர்வாலை கட்சியில் சேர்த்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

காரணம் 8:

இது கொஞ்சம் காமெடியாகவும் இருந்தது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முடக்க முடியாது என்பதை நிரூபணம் செய்வதற்காக பாஜக 3 தொகுதிகளை இழந்துள்ளது என்று காமெடி கருத்தும் அதில் பதிவிடப்பட்டிருந்தது