சென்னை:
முத்திர சேது திட்டத்தின் கீழ் ஈரானில் சிக்கி தவித்த தமிழக மீனவர்கள் உள்பட அனைவரையும்  அழைத்து வர அனுப்பப்பட்ட  ‘ஐ.என்.எஸ். ஜலஸ்வா‘ கடற்படை கப்பல், அங்கிருந்து 687 பேரை அழைத்து கொண்டு, இன்று காலை தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது.

கொரோனா ஊரடங்கு காரணமாக  தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 743 மீனவர்கள்  ஈரான் நாட்டில் சிக்கிய நிலையில் அவர்கள்  தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து,  முதல்வர் எடப்பாடியின் வேண்டுகோளை ஏற்று,   இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் மூலம் ஈரான் நாட்டில் உள்ள தமிழக மீனவர்களை  மீட்கும் நடவடிக்கையை எடுத்து. அதையடுத்து,  ஈரான் நாட்டில் இருக்கும் தமிழக மீனவர்களை தமிழகம் அழைத்துவர  ஐ.என்.எஸ் ஜலாஷ்வா சிறப்புக் கப்பல் தூத்துக்குடியில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. அந்த கப்பல்,  (25/06/2020)  ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு சென்றடைந்தது.
இதையடுத்து, அங்கு சிக்கியிருந்த  687 தமிழர்களை மீட்டு, இன்று காலை தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தது. கப்பலில் இருந்து இறங்கியதும்,  அனைவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருக்கிறதா? என மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
பின்னர் அனைவரும் பஸ்களில் பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சுங்க மற்றும் குடியுரிமை சோதனை முடிந்ததும் அரசு பஸ்கள் மூலம் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.