பொள்ளாச்சி

டெங்கு வைரஸ் பரவலையொட்டி பொள்ளாச்சியில் கொசு ஒழிப்பு நடவடிக்கை தீவிரமாக்கப்பட்டுள்ளது,

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை தாலுகா பகுதி நகர, கிராமப்புறங்களில், சுமார் 5 ஆண்டுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பீதி ஏற்பட்டதையடுத்து, நகர மற்றும் கிராமபுறங்களில் இந்நோய் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆயினும் பல்வேறு கிராமங்களில், பரவிய டெங்குவால் பலரும் அவதிப்பட்டனர். அப்போது அங்குள்ள மருத்துவமனைக்கு வரும் நோயளிகளுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது.

இங்கு கடந்த சில ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும், மருத்துவ பரிசோதனை நடவடிக்கை தொடர்ந்தது. நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை பல வாரமாக அவ்வப்போது பெய்ததால், நகர மற்றும் கிராமபுறங்களில், மீண்டும் டெங்கு பீதி ஏற்படுவதை தடுக்க, டெங்கு தடுப்பு நடவடிக்கை குறித்த நடவடிக்கை மட்டுமின்றி, விழிப்புணர்வும் எற்படுத்தப்படுகிறது.

சுகாதார ஊழியர்கள் தினமும் வார்டு வாரியாக வீடு மற்றும் வணிக வளாக பகுதிகளில் நீர் நிலைகள் எவ்வாறு உள்ளது என கண்டறிந்து, அதில் அபேட் கிருமி நாசினி தெளித்து கொசுப்புழுக்களை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். குறிப்பிட்ட வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில், காலை அல்லது மாலைநேரத்தில் கொசு மருந்து அடிக்கும் பணியும் நடக்கிறது.