ஒரு போலி சாட்சியால், தான் செய்யாத ஒரு கொலைக்குச் சிறையில் 39 ஆண்டுகள் தண்டனைப் பெற்ற ஒரு அப்பாவி கருப்பின அமெரிக்கர் ரிக்கி ஜேக்சனுக்கு ஓஹியோ நீதிமன்றம் $ 1 மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு.
ஓஹியோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த முறையீட்டு வழக்கில் வியாழனன்று இந்தத் தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.
ஒரு நிருபர், தொலைபேசியில் இந்தத் தகவலை ஜாக்சனுக்கு தெரிவித்தவுடன் “ஆஹா, மிக்க மகிழ்ச்சி. இந்தச் செய்தி தாங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியவந்தது. இந்தப் பணம் மிகவும் பயனுள்ளதாய் இருக்கப் போகின்றது “என ஜாக்சன் கூறினார். ”
இன்னசன்ஸ் பிராஜெக்ட் எனும் தன்னார்வ அமைப்பு இவருக்காக இந்த வழக்கில் வாதாடி இந்த வெற்றியைத் தேடித் தந்துள்ளது.
நீதிமன்ற உத்தரவின் செய்தி கேட்டபிறகு, இவருக்காக வாதாடிய அவரது வழக்கறிஞர், மைக்கேல் பெர்ரி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அவர் கூறுகையில், “ ரிக்கி மிகவும் நல்லவர். அவருக்காக வாதாடியதில் எங்களுக்குப் பெருமை. நான் சந்தித்ததிலேயே அறிவார்ந்தவர் ரிக்கி. எங்கள் அமைப்பின் ஒரு நிதி ஆலோசகர் இந்தப் பணத்தை நல்ல வழியில் பயன்படுத்த ஜாக்சனுக்கு உதவுவார்” என்றார்.
1975-ல் மே 19 அன்று தொழிலதிபர் ஹாரி பிராங்க்ஸ் கொலை செய்யப்பட்டார். அந்தக் கொலைவழக்கில் 13 வயது சிறுவன் எடி வெர்னான் அளித்த பொய்சாட்சியின் காரணமாக ஜாக்சன் (வயது 57) மற்றும் விலே பிரிட்ஜ்மேன் (வயது 60) ஆகிய இருவரும் சிறைத் தண்டனை அனுபவித்து வந்தனர்.
இந்நிலையில், 2013ம் ஆண்டு ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட
எடி வெர்னான், (இப்போது வயது 53) அவரைச் சந்தித்த ஒரு அமைச்சரிடம் தான் அந்தக் கொலையை நேரில் பார்க்கவில்லை. அப்போது கிளீவ்லன்ட் காவல்துறை துப்பறிவுப் பிரிவு அதிகார்கள் தன்னை பொய்சாட்சி சொல்ல வலுக்கட்டாயப் படுத்தினார்கள் என ஒப்புக் கொண்டார்.
இதனை அடுத்து அவர்கள் இருவரும் கடந்த ஆண்டு நவம்பரில் விடுதலை செய்யப்பட்டனர். பொய்சாட்சியால் பாதிக்கப்பட்டு சிறையில் பல்லாண்டுகளைக் கழித்த (39 ஆண்டுகள்) இருவருக்கும் இழப்பீடு வழங்கக் கோரி இன்னசன்ஸ் பிராஜெக்ட், ஓஹியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தது.
ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அமெரிக்காவில் ஒவ்வொரு 25 மரணதண்டனைக் கைதிகளில் ஒரு அப்பாவி தண்டனை பெற்றுள்ளார். இவ்வாறு சுமார் 3,000 அமெரிக்க கைதிகள் மரண தண்டனைக்காகக் காத்திருக்கின்றார்கள்.
அமெரிக்கா டுடே எனும் பத்திரிக்கையின் சமீபத்திய ஆய்வு முடிவின்படி மற்ற இனக் குழுவை விடக் கறுப்பின அமெரிக்கர்கள் போலீசாரால் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.
கறுப்பர்கள் அதிகமாகக் கைது, கொலை மற்றும் தண்டனைக்குள்ளாவது அமெரிக்காவை அதிகம் பிடித்திருக்கும் பரந்த பொருளாதார மற்றும் கல்வியில் நிலவும் சமத்துவமின்மையை பிரதிபலிக்கிறது.
இந்தியாவில் இதுபோன்றே அப்பாவி முஸ்லிம்களும் தலித்துகளும் தண்டனைப் பெற்றுவருவது ஒப்பிடத்தக்கது.