ரஜினி முகாமில் ‘லடாய்ஸ்’ ஆரம்பம் !
◆ ‘டகுல்’ மணியனை விரட்டியடிப்போம் !
● மக்கள் மன்ற நிர்வாகி கொதிப்பு !
—–—————————-
சிறப்பு நேர்காணல் !
———————————
● அர்ஜுனா ●
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் பலங்கள் என்று ஒரு சுருக்கமான பட்டியல் தயாரித்தால், அதில் முதலிடத்தில் இருப்பது…. ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்று பெயர் மாற்றம் பெற்றுள்ள ‘ரஜினி ரசிகர் மன்றம்’தான் !
ரஜினி மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்கள்தான், ரஜினியின் அரசியல் பயணத்தை – ரஜினி விரும்புகிறபடி வடிவமைக்கப்போகும் ‘காலா’ட் படை வீரர்கள் !
இவர்களிடமிருந்து மக்கள் மன்ற உள்விவகாரங்களை திரட்டுவது என்பது, அவ்வளவு லேசான விஷயம் இல்லை !
ஆனாலும், நமது திறமைகளை ஒன்றுதிரட்டி, நட்பு வட்டத்தை வலுவாக்கி, முகம் காட்ட விரும்பாத ‘மதுரை வீரன்’ தம்பியை, நேர்காணல் செய்தோம் !
பத்திரிகை.காம் : சூப்பர் ஸ்டாரின் முக்கியத் தளபதிகளில் ஒருவரான தங்களுக்கு, வாழ்த்துக்களும் வணக்கமும்.
‘மதுரை வீரன்’ தம்பி : வணக்கம் ஐயா. ‘பத்திரிகை.காம்’ இதழுக்கு, தலைவர் சார்பில் வாழ்த்துக்கள். வணக்கம்.
ரஜினி மக்கள் மன்றத்திற்கு வெளியில் உள்ள சிலபேர், ரஜினியின் ‘முக்கிய ஆலோசகர்’ என்று சுயமாக முத்திரை குத்திக்கொண்டு; “பதவி மறுப்பாளரான காமராஜரிடம் பாடம் படித்துவிட்டுவந்த மாணவன் நான்..” என்று சொல்லிக்கொள்ளும் ஒரு கதர்சட்டைப் பேச்சாளர், “ரஜினி அமைக்கும் ஆட்சியில், ‘சட்ட மன்ற அவை முன்னவர்’ என்ற முதலமைச்சருக்கு நிகரான பொறுப்பில் இருப்பேன்” என்ற கருத்தை, நைசாக ஒரு வார இதழின் நேர்காணலில், இலை மறைவு – காய் மறைவாக, பதிவு செய்துள்ளாரே, கவனித்தீர்களா ? உங்கள் கருத்து என்ன ?
பார்த்தேன், படித்தேன்.
நீங்கள் பேச்சாளர் தமிழருவி மணியன் பற்றி, ‘காமதேனு’ இதழில் வெளியான அவரது நேர்காணல் பற்றி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். மற்ற மாவட்டச் செயலாளர்களும் இதுபற்றி என்னிடம் வருத்தப்பட்டு கொதிப்புடன் பேசினார்கள். நாங்கள் வெறும் ரஜினி ரசிகர்கள் அல்ல. தலைவரை சுற்றி நடக்கும் அரசியல் நடவடிக்கைகளையும் அரசியல் ஊடுருவல்களையும் உற்று நோக்கி, கவனித்து, ஆதாரங்களோடு தலைவரின் பார்வைக்கு கொண்டு செல்லும், உளவுப் படை வீரர்கள் ஆவோம்.
எங்கள் தலைவரை திசை திருப்பி, குழப்பி மீன் பிடிக்க பலரும் முயற்சிப்பார்கள். வளர்ந்துவரும் எங்களுக்கும் இப்படியான நெருக்கடிகள் வரும். அதைத் தலைவரும் அறிவார், நாங்களும் அறிவோம்.
◆ தம்பி, நீங்க இவ்வளவு விவரமாவும் ஷார்ப்பாவும் இருப்பீங்கன்னு நான் நினைக்கவே இல்லை...
◆ அதெல்லாம் ஒன்றுமில்லேய்யா.…
◆ உங்க தலைவரைப் பற்றி சுருக்கமா சொல்லுங்க....
◆ எங்க தலைவர், சர்வ ஞானமும் உள்ள கடவுளின் குழந்தை. அவர் அஷ்டாவதானி. அவரது நட்பு வட்டத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். அதை மதிப்பார். தேவைப்படும்போது மனம் திறந்து பாராட்டுவார். பயன்படுத்தி, அழகு பார்ப்பார். தோள் மீது கை போட்டு தலைவர் பேசுவதை வைத்து, “எல்லாம் தெரிந்த ஏகாம்பரம்” என்ற நினைப்பில், “நான்தான் ரஜினிக்கு அரசியல் அட்வைசர்…” என்கிற தொனியில், வெளியில் போய் புலம்ப ஆரம்பித்தால், அடுத்த நொடியில் அவர்களை ஓரம்கட்டிவிடுவார்.
◆ அதெப்படி அவ்வளவு திட்டவட்டமாக சொல்றீங்க, மதுரை வீரா ?
◆ பேச்சாளர் தமிழருவி மணியன், ‘காமதேனு’ வார இதழுக்கு சமீபத்தில் பேட்டி கொடுத்திருந்தார். அதில், “பதவிக்காக ரஜினியிடம் யாசகம் [ பிச்சை ] கேட்கமாட்டேன்”னு சொல்லியிருக்கிறார். அதுவே, சுத்தப் பொய். இவரோட முழு ஜாதகமும் தலைவருக்கு நேற்றுவரை தெரியாது. நல்ல பேச்சாளர் என்று மட்டுமே தெரியும். இவரோட இந்த பேட்டியை பார்த்ததும், தலைவர் (ரஜினி) சூடாயிட்டார். இவரைப் பற்றிய முழு விவரத்தையும், மூப்பனாரின் விஸ்வாசியான ஒரு கராத்தே வீரரிடமிருந்தும், தமாகா தலைவர் ஜி. கே. வாசனின் வட்டாரத்திலிருந்தும் ‘சட்’டென்று திரட்டிவிட்டார்.
விவரமா சொல்றேன்… குறிச்சிக்கங்க.
தமிழருவி மணியனின் இயற்பெயர் : தெய்வசிகாமணி
தனியார் பள்ளி ஒன்றின் மூன்றாம் வகுப்பு ஆசிரியர். 1971 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, ஸ்தாபன காங்கிரசின் பேச்சாளரானார். தலைவர் காமராஜரின் மறைவுக்குப் பிறகு, பா. ராமச்சந்திரன் தலைமையிலான ஜனதா கட்சியின் பேச்சாளர். பிறகு, ராமகிருஷ்ண ஹெக்டேவின் லோக் சக்தியில் இருந்தார். இரா. செழியன் தலைவரானபோது, மறுபடியும் ஜனதா கட்சி. 1996 ல் கோபண்ணா ரூட்டில், மூப்பனார் முன்னிலையில், த.மா.கா.வில் சேர்ந்தார். சேர்ந்த உடனே, மதுரை – மத்திய தொகுதியில் போட்டியிட எம்.எல்.ஏ. சீட்டு கேட்டு, மூப்பனாரை நச்சரித்தார். “நீங்க சென்னையில் சூளையில் தனியார் பள்ளி ஆசிரியர். நீங்க எப்படி மதுரையில் சீட்டு கேக்கறீங்க ? அதுமட்டுமல்ல; எம்.ஏ.ஹக்கீம், மாணவராக இருந்த சமயத்திலிருந்தே காங்கிரஸ். உங்களைவிட நல்ல பேச்சாளர், வக்கீல். அவருக்குதான் ‘சீட்டு’. நீங்க அவசரப்படாதீங்க…” என்று புத்திமதி சொல்லி, அனுப்பினார்.
மூப்பனார் மறைவுக்குப் பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக ஜி.கே.வாசன் இருந்தார். ஜி.கே. வாசனை நெருக்கி, மயிலாப்பூர் தொகுதியை கேட்டார், தமிழருவி மணியன். வாசன், இவருக்கு ‘நோ’ சொல்லிவிட்டார். இப்படி, பதவி பிடிப்புக்காக ‘லோ..லோ…’ என்று அலைந்த மணியன், “பதவி மறுப்பாளரான காமராஜரிடம் பாடம் படித்துவிட்டுவந்த மாணவன் நான்” என்று திட்டமிட்டு, ‘டகுல்’ அடிக்கிறார்.
மணியனின் அந்த பேட்டியின் தலைப்பே ரொம்ப தமாஷாக இருக்கிறது. கவனியுங்கள். தலைவர் ரஜினி, முதலமைச்சர் பதவியை தாம்பாளத்தில் வைத்து, “எடுத்துக்கோங்க” என்று இவரிடம் கெஞ்சியது போலவும்; “அப்படியெல்லாம் நான் பிச்சை கேட்கமாட்டேன் போ….” என்று சொல்லி, மனியன் எங்கள் தலைவரை விரட்டியது போலவும், நைசாக காட்சிப் படுத்துகிறார்.
தமிழருவி மணியனின் இந்த பேட்டியும் அதில் உள்ள கருத்துக்களும், அதன் தலைப்பும், தலைவருக்கு எதிரான தீய சக்திகளின் பிடியில் மணியன் சிக்கிக்கொண்டது, நிரூபணம் செய்கிறது.
தி.மு.க. எதிர்ப்பாளர் என்றும், கருணாநிதி எதிர்ப்பாளர் என்றும் சொல்லிக்கொள்ளும் மணியன், அண்ணா அறிவாலயத்தில் ‘சின்ன குத்தூசி’ திருவாரூர் தியாகராஜனுக்கு ‘முரசொலி’ அறக்கட்டளை சார்பாக நடந்த விருது வழங்கும் விழாவில் பேசினார். என்ன பேசினார் என்றால்,” ஊர் ஊராக சென்று, கலைஞரை வசை பாடினேன். அதற்கு பிராயச்சித்தமாக, கலைஞரை இந்த விழாவில், அவர் முன்னிலையில், வெகுநேரம் பாராட்டிப் பேச விரும்புகிறேன்… கலைஞர், தமிழ் நாட்டின் அற்புதங்களில் ஒருவர். இவரைவிட்டால், தமிழ்நாட்டுக்கு விமோட்சணமே இல்லை…” என்று பேசினார். மேடையில் இருந்த கருணாநிதி, மெழுகாக உருகிச் சிந்துகிறபடி, பேசினார். அதன் பயனாக, நாகநாதன் தமிழக அரசின் திட்டக்குழு தலைவராக இருந்தபோது, கலைஞர் கருணாநிதியிடம் கெஞ்சிக் கூத்தாடி, அதில் உறுப்பினராக ஆனார். இதன் பயனாக தமிழக அரசின் சொகுசு கார் பயணமும் லட்ச ருபாய் சம்பளமும் கிடைத்தது. எடுபிடிக்கு ஏவல் ஆட்களும் கிடைத்தார்கள். தமிழருவி மணியன் அந்தத் தேதியிலேயே தமிழ் நாட்டின் முதல்வராக ஆகிவிட்டதாக கனவு கண்டார்.
அதுமட்டுமல்ல, கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் ரோட்டில் உள்ள, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சொகுசு அடுக்குமாடி தொகுப்பில் ஒரு வீட்டை “திட்டக் குழு உறுப்பினர்’ என்ற முறையில், மடக்கிப் போட்டுக்கொண்டார், மணியன். இதுதான் இந்த ‘டகுல்’ பேர்வழியான தமிழருவி மணியனின் முன் வரலாறு.
கோடான கோடி தன்னலமற்ற மக்கள் மன்ற செயல்வீரர்களின் உள்ளம் கவர்ந்த எங்களின் தலைவர் ரஜினி ‘பூஜ்யம்’ என்றும், இவரது ஆலோசனையைப் பெற்றுதான், கட்சியை தலைவர் நடத்தப்போகிறார் என்றும் ஒரு மாயத் தோற்றத்தை, ‘பரபரப்பு’ செய்திபோடும் ஊடகங்கள் மார்க்கத்தில் உருவாக்கி, உலவவிடுகிறார், தமிழருவி மணியன்.
உலகம் போற்றிய ‘மக்கள் ஜனாதிபதி’யான ஏ.பி.ஜே. அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகராகப் பணியாற்றிய பொன்ராஜ்; வல்லரசு மற்றும் வளர்ந்த நாடுகளே ஒன்று திரண்டு வந்து பாராட்டிய, ஓடந்துறை பஞ்சாயத்துத் தலைவர் சண்முகம் போன்ற நேர்மையின் சிகரங்கள் எல்லாம், தலைவரின் அன்புப் பிடியில் அமைதியாக இருக்கிறார்கள்.
ஆனால், இத்துப்போன தகர டப்பாவான தமிழருவி மணியன், ஓவராக சத்தம் போடுகிறார். இனி அவர் ஓரங்கட்டப்படுவார். ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்களும் மணியனின் ஊடுருவல் செயலை வெறுக்கிறோம். தலைவர் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஊடுருவல் சக்தியான மணியன், ஒரு சுபயோக சுபதினத்தில், ரஜினி மக்கள் மன்ற வட்டாரத்திலிருந்து, விரட்டப்படுவார்.
— என்று மிகவும் சரளமாக, விரல்நுனியில் விவரங்களை வைத்துக்கொண்டு சொல்கிறார், முகம் காட்ட விரும்பாத ‘மதுரை வீரன்’ தம்பி !
◆