சென்னை: சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பங்கேற்று உரையாற்றி முதல்வர் ஸ்டாலின், மூன்று  முத்தான  அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெற்றது. இதன் தொடக்க விழாவின்போது கருத்தரங்ககை தொடங்கி வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.

இந்த சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு கருத்தரங்கம் இன்று முதல் வருகின்ற 7 ஆம் தேதி வரை என 3 நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியில் சர் ஜான் மார்ஷல் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்; ஒரு வடிவவியல் ஆய்வு என்னும் நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த விழாவில் சிந்து சமவெளி உலோக காளையின் மாதிரியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நினைவு பரிசாக வழங்கினார். மேலும் சிந்துசமவெளி பண்பாடு குறித்தான காணொளி காட்சிகளும் ஔிப்பரப்பபட்டது.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் விழா பேருரை ஆற்றினார். அப்போது முத்தான மூன்று அறிவிப்புகளை வெளியிட்டார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் வருமாறு :

அறிஞர் பெருமக்கள் நிறைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் தமிழ்ப் பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாய கடமை என்று உலகுக்கு உணர்த்தும் வகையில், மூன்று முக்கியமான அறிவிப்புகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் வெளியிட விரும்புகிறேன்.

  1. செழித்து வளர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளிப் புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துக்கொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்என்பது முத்தான முதல் அறிவிப்பு!
  2. சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின்சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் அவர்கள் பெயரில் ஓர் ஆய்வறிக்கை அமைக்க ரூ.2 கோடி நல்கை வழங்கப்படும் என்பது இரண்டாவது அறிவிப்பு!
  3. தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்றுஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி, கல்வெட்டியல் ஆய்வாளர்கள், நாணயவியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இது மூன்றாவது அறிவிப்பு.

இந்த மூன்று அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நான் நம்புகிறேன்.

சிந்துவெளி முதல் கீழடி வரை தமிழினத்தின் பெருமை நிரம்பி இருக்கிறது. பாவாணர், ராசமாணிக்கனார், க.த.திருநாவுக்கரசு போன்ற மாபெரும் அறிஞர்கள் எல்லாம் இது குறித்து எழுதியிருக்கிறார்கள். ‘சிந்து முதல் வைகை வரை’ என்ற நூலை நம்முடைய ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் எழுதி இருக்கிறார். டோனி ஜோசப் அவர்கள் மரபணு, மானுடவியல் சார்ந்த ஆய்வுகளை வைத்து நிறைய எழுதிக்கொண்டு வருகிறார். இன்னும் ஏராளமான ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் வந்து கொண்டிருக்கிறது.

அறிவியல் முறைப்படி சான்றுகள் அடிப்படையில், தமிழ்ச் சமூகத்தின் தொன்மையை அறிவுலகம் இப்போது ஏற்றுக்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தமிழைத் தவிர்த்துவிட்டு இனி எழுதமுடியாது என்று நாம் உரக்கச் சொல்வோம்! ஜான் மார்ஷல் அவர்களின் கண்டுபிடிப்பின் நூற்றாண்டில் அவருக்கு நாம் நன்றியை உரித்தாக்கி, அவர் விட்டப் பணியை நாம் தொடர்வோம்!” என்றார்.

தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார்.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில்,   நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி, மற்றும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் நிதித்துறை மற்றும் தொல்லியல் துறையின் முதன்மை செயலாளர் உதயசந்திரன் மற்றும் சுற்றுலா, பண்பாட்டு மற்றும் அறநிலையங்கள் துறையின் முதன்மை செயலாளர் சந்திர மோகன் கலந்து கொண்டனர்.மேலும் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் துணை மேயர் மகேஸ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், தொல்லியல் துறை பேராசியர்கள் கிரெக் ஜாமிசன், நயன்ஜோத் லஹிரி, டோனி ஜோசப்  மற்றும் சிந்து சமவெளி வரலாற்று ஆய்வாளர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜன் உள்ளிட்ட தொல்லியல் துறை சார்ந்த ஆசிரியர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.