இந்தோனேஷியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட ஜாவா தீவில் வசிக்கும் தெங்கெரேஸ் இன மக்கள் அங்குள்ள பிரும்மோ எரிமலையில் ஆண்டுதோறும் காணிக்கை செலுத்தும் வினோத நிகழ்வு.
உலகின் ஆற்றல்மிக்க எரிமலைகளில் 120க்கும் அதிகமான எரிமலைகள் இந்தோனேஷியாவில் உள்ளது, இங்குள்ள ஜாவா தீவில் கிழக்கு மேற்காக 600 மைல் நீளத்திற்கு அந்த தீவின் முதுகெலும்பாக பலநூறு எரிமலைகள் இருக்கின்றன.
இங்குள்ள எரிமலைகளில் இருந்து வெளியேறும் லாவா எனும் நெருப்புக் குழம்பு விவசாயத்திற்கு ஏற்ற மண்ணாக மாறுவதால், இந்த பகுதியில் விவசாயம் செய்வோர் ஏராளமாக இருக்கின்றனர்.
இவர்களில் குறிப்பாக இந்து மதத்தைச் சார்ந்த தெங்கெரேஸ் இன மக்கள் ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதத்தில் இங்குள்ள பிரும்மோ எரிமலைக்குச் சென்று தங்கள் வாழ்வு செழிக்க உதவும் மலைக்கு காணிக்கை செலுத்தும் வினோத நிகழ்வு நடைபெறுகிறது, இந்த விழாவை ‘யத்னய கசட’ என்று அழைக்கிறார்கள்.
உணவு, உணவுப் பொருட்கள், பணம், ஆடு, கோழி, மலர்கள் என்று தங்களால் இயன்ற பலவற்றை எரிமலையின் மீதேறி விளிம்பில் நின்று அதன் மையப்பகுதிக்குள் வீசி எறிந்து தங்கள் வேண்டுதலை இவர்கள் ஆண்டுதோறும் நிறைவேற்றுவதற்குப் பின் வேறு ஒரு காரணம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மும்மூர்த்திகளை தெய்வமாக வணங்கும் இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரும்மோ எரிமலையை ப்ரம்மனாக கருதி வழிபடுகிறார்கள்.
15 ம் நூற்றாண்டில் வாழ்ந்த மஜபாஹிட் அரசகுடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ரோரோ மற்றும் அவரது கணவர் ஜோகோ சேகர் குழந்தை இல்லாத தங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் என்று வேண்டிக்கொண்டதாகவும், அப்படி தங்களுக்கு குழந்தை பிறந்தால் தங்களுக்கு பிறக்கும் 25வது குழந்தையை இந்த எரிமலைக்கு காணிக்கையாக தருவதாகவும் வேண்டிக்கொண்டனர்.
இவர்களின் வேண்டுதல் நிறைவேறியதை அடுத்து தங்கள் 25வது குழந்தையை இந்த எரிமலைக்கு காணிக்கையாக தந்ததைத் தொடர்ந்து, அந்த குழந்தையின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட நாளில் உணவு மற்றும் தானியங்களை படையலிட்டு காணிக்கை செலுத்தி வழிபட தொடங்கினர்.
இதன் தொடர்ச்சியாக மஜபாஹிட் வம்சாவளியில் வந்த இந்துக்களான தெங்கெரேஸ் இன மக்கள் இன்றளவும் இதை ஆண்டுதோறும் பின்பற்றி வருகின்றனர்.
எரிமலையின் விளிம்பில் நின்றுகொண்டு இவர்கள் தூக்கியெறியும் பணம் உள்ளிட்ட பொருட்களை பிடிப்பதற்காக உள்ளூர் மக்கள் பலர் எரிமலையின் வயிற்றுப்பதிக்குள் உள்ளிறங்கி வலைகளை கொண்டு பிடிப்பதும், இந்த நிகழ்ச்சியைக் காண பல்லாயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குவிந்துவருவதும் ஒவ்வோர் ஆண்டும் நடைபெற்றுவருகிறது.