யோத்தி

யோத்தி நகரில் மசூதியுடன் மருத்துவமனை மற்றும் நூலகம் உள்ளிட்டவற்றைக் கட்ட இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.

பல வருடங்களாக நிலுவையில் இருந்த ராம்ஜென்மபூமி – பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தது.  இஸ்லாமியர்கள் புதியதாக மசூதி கட்ட வசதியாக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய அரசுக்கு உத்தரவிட்டது.  அதன்படி கடந்த 5 ஆம் தேதி ராமர் கோவிலுக்குப் பூமி பூஜை நடத்தப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது, புதிய மசூதி கட்ட நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மசூதியைக் கட்டும் பொறுப்பை இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை எடுத்து நடத்தி வருகிறது.    இதற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.  உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், “முதல்வர் என்னும் முறையில் எனக்கு எந்த மதத்துடனும் எவ்வித பிரச்சினையும் இல்லை.   ஆயினும் நான் யோகி என்பதால் மசூதி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார்.

இது குறித்து மசூதி கட்ட உள்ள அறக்கட்டளையின் செயலாளர் அதார் ஹுசைன், “மசூதியுடன் சேர்ந்து மருத்துவமனை, நூலகம், இஸ்லாமியக் கலாச்சார ஆய்வு மையம் உள்ளிட்டவற்றைக் கட்ட இந்தோ இஸ்லாமியக் கலாச்சார அறக்கட்டளை முடிவு செய்துள்ளது.  ஆகவே முதல்வர் இதை மசூதி அடிக்கல் நாட்டு விழா எனக் கருத வேண்டாம்.

நாங்கள் அவசியம் முதல்வர் யோகியை விழாவுக்கு அழைக்க உள்ளோம்.  அவர் உத்தரப்பிரதேசத்தில் அனைத்து மக்களுக்கும் முதல்வர் அவர்.  நாங்கள் மசூதியுடன் சேர்ந்து பல மக்கள் நலப் பணிகளையும் செய்ய உள்ளதால் முதல்வர் எங்கள் அறக்கட்டளைக்கு நிதி உதவு செய்வார் எனவும் நாங்கள் நம்புகிறோம்” எனக் கூறி உள்ளார்.