சென்னை: கிரிப்டோகரன்சிகள், அந்நிய செலாவணி முதலீடு, தனிநபர் டெபாசிட் வசூலிப்பது குற்றம் என தமிழ்நாடு காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் தனிபர் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதுவும் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏழை மற்றும் நடுத்தர மக்கள் தனிநபர்கள், சிறு நிறுவனங்களில் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு, பின்னர் அந்த நிறுவனம் திடீரென மாயமாகி விடுவதால், அவர்கள் கட்டிய பணம் அம்போவாகிறது. இது தொடர்பாக காவல்துறை பலமுறை எச்சரித்தும், இன்னும் பலர் தங்களது மனநிலையை மாற்றாமலேயே இருந்து வருகின்றனர்.

இதற்கிடையில் நடுத்தர மற்றும் உயர்தர மக்களை ஏமாற்றும் வகையில், அந்நிய செலாவணி முதலீடு, கிரிப்போ கரன்சியில் முதலீடு பல மோசடிகளும் நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் கிரிப்டோகரன்சிகளுக்கு இன்னும் அங்கீகாரம் வழங்கப்படாத நிலையில், 2021ஆம் ஆண்டில் சுமார் ரூ.1,03,768 கோடி மதிப்புள்ள கிரிப்டோகரன்சிகள் சட்ட விரோதமாக வர்த்தகம் செய்ய்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பொருளாதார ரீதியிலான குற்றங்களை தடுக்கும் வகையில், தமிழ்நாடு காவல்துறையினல் பொருளாதார குற்றப் பிரிவு எஸ்.பி. விஜயகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதன்படி,  கிரிப்டோகரன்சிகள், அந்நிய செலாவணி முதலீடு மற்றும் வாராந்திர/மாதாந்திர லாபத்தை வருமானமாக வழங்குவதற்காக பொதுமக்களி டமிருந்து தனிநபர் அல்லது நிறுவனம் டெபாசிட் கோருவது குற்றமாகும்.

இதுபோன்ற நிறுவனங்களின் அறிவிப்புகளால் பொதுமக்கள் ஏமாற்றப்படலாம். ஆகவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும், மேலும் சந்தேகம் மற்றும் தகவல் தேவைப்படின்  9994790008 என்ற வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில்,  தனிநபரோ, நிறுவனமோ பொதுமக்களிடம் பணம்(deposit) பெற்று , #cryptocurrency / #forex ல் முதலீடு செய்து மாதம்தோறும்/ வாரந்தோறும் லாபம் தரப்படும் என்பது சட்டத்திற்கு புறம்பானது. பொதுமக்களின் பணம் மோசடி செய்யப்படலாம் .தகவல் அளிக்க வாட்ஸாப்- 9994790008

[youtube-feed feed=1]