சென்னை: தமிழகஅரசின் குற்றங்களை விமர்சித்தால் அடக்குமுறையா என கேள்வி எழுப்பி உள்ள நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்றவர், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிடும் 3 பெண் வேட்பாளர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தென் சென்னையில் எழுத்தாளர் நாச்சியாள் சுகந்தி போட்டியிடுவார் என சீமான் அறிவித்துள்ளார்.
பெண்கள் உரிமைத்தொகை தொடர்பாக தமிழக அரசின் அறிவிப்பை வெளியிட்ட வாய்ஸ்ஆப் சவுக்கு அட்மின் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் அரசு குறித்து கருத்து தெரிவிக்ககூட பொதுமக்களுக்கு உரிமை இல்லையா என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. திமுக அரசின் இந்த நடவடிக்கைக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இநத்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத்தொகை வழங்கும் திமுக அரசின் நிதிநிலை அறிக்கையின் அறிவிப்பை திரைப்பட நகைச்சுவைத் துணுக்கோடு பொருத்தி இணையத்தில் விமர்சித்ததற்காக பிரதீப் எனும் இளைஞரைக் கைதுசெய்திருப்பது ஏற்புடையதல்ல. மாற்றுக் கருத்துடையோரையும், அரசின் குற்றங்குறைகளை விமர்சிப்போரையும் அரசியல் எதிரிகளாகக் கட்டமைத்து, அவர்கள் மீது அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் திமுக அரசின் கொடுங்கோல்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்; இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் பயனடைவார்கள் எனக் கூறிவிட்டு, இப்போது தகுதியுள்ளவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை என திமுக அரசு மாற்றிப்பேசி, தகுதி எனும் சொல்லாடலை புதிதாக இடைச்செருகும்போது எழும் விமர்சனத்தைத்தான் திரைப்படத்தின் நகைச்சுவைக்காட்சியோடு இணைத்து எள்ளல் செய்திருக்கிறார் தம்பி பிரதீப்.
கேலிச்சித்திரங்களின் நவீனப்பரிணாம வளர்ச்சிதான் இதுபோன்ற காணொளி நகைச்சுவைத்துண்டுகள். அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதற்காகவே கைது நடவடிக்கை என்பது மிக மிக அதீதமானது. சமூகத்தைப் பிளவுபடுத்தும், மண்ணுக்கும், மக்களுக்கும் பெருங்கேட்டை விளைவிக்கும் எத்தனையோ பேரைக் கைதுசெய்ய மறுக்கும் திமுக அரசு, எளிய மக்களின் விமர்சனங்களைச் சகிக்க முடியாது, அவர்களைக் கைதுசெய்து சிறைப்படுத்த எண்ணுவது சனநாயக விரோதமாகும்” என குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து இன்று செய்தியளார்களை சந்தித்த சீமான், நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்தவர், பாஜகவை வளர விடாமல் தடுக்க மாநில கட்சிகள் இணைந்து மாற்று அணியை உருவாக்க வேண்டும் என்று கூறினார்.