அஹமதாபாத் :
அருணாச்சல பிரதேச எல்லையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த குஜராத் மாநிலம் ஜூனாகாத் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் சயாலி இம்ரான் கலுபா சென்ற வாகனம் பள்ளத்தில் விழுந்ததில் உயிரிழந்தார்.
உயிரிழந்த நாயக் சயாலி இம்ரான் கலுபாவின் உடல் அவரது சொந்த ஊரில் அடக்கம் செய்ய டெல்லி – அஹமதாபாத் இண்டிகோ 6 இ 2257 விமானத்தில் கொண்டுவரப்பட்டது.
விமானம் அஹமதாபாத்தில் தரையிறங்கியதும், விமானி இறந்த ராணுவவீரன் உடலை கொண்டுவந்திருக்கும், இரண்டு ராணுவவீரர்களும் முதலில் இறங்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதுவரை சக பயணிகள் அமைதிகாக்குமாறும் கோரிக்கைவிடுத்தார்.
விமானியின் இந்த திடீர் அறிவிப்பு அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து குஜராத் ராணுவ தலைமையகம் தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள, இண்டிகோ நிறுவனம், “தேச நலனுக்காக அவர் செய்த தியாகத்திற்கு நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று பதிவிட்டுள்ளது.
[youtube https://www.youtube.com/watch?v=J060mPeqPCQ]