டெல்லி: கொரோனா பொதுமுடக்கத்தால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், முன்பதிவு செய்திருந்த பயணிகளின் ரூ.1,030 கோடி கட்டணத்தை பிரபல விமான நிறுவனமான இண்டிகோ திரும்பி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் கடந்த ஆண்டு (2020) மார்ச் 24ந்தேதி பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அனைத்து போக்குவரத்துக்களும் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டு மூன்று மாதங்களுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு விமான போக்குவரத்துச் சேவை முற்றிலும் முடங்கியது.
இந்த லாக்டவுன் காலத்தில் ஏராளமானோர் விமான பயணங்களுக்கு முன்பதிவு செயதிருந்தனர். விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், விமான பயணிகளின் கட்டணம் திருப்பிக்கொடுக்க மத்தியஅரசும் உச்சநீதிமன்றமும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது.
அதன்படி, இண்டிகோ விமான நிறுவனம் பயணிகளின் ரத்தான பயணத்துக்கான தொகையை அனைத்து வாடிக்கையாளர்களுக்கு திரும்ப வழங்கிவிட்டதாகத் தெரிவித்துள்ளது.
சுமார் ரூ.1,030 கோடி நிலுவைத் தொகை, வாடிக்கையாளர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தி முடிக்கப்பட்டதாக நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.