புதுடெல்லி: நரேந்திர மோடி அரசின் மீது இளையதலைமுறையினர் அதிருப்தியில் இருப்பதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சியின்மை, வேலையின்மை, வகுப்புவாதம் உள்ளிட்டவையே அவர்களை இந்த மனநிலைக்குக் கொண்டுவந்துள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பொருளாதார மந்தநிலை, வேலையின்மை ஆகியவை நீடித்திருக்க, வெறுமனே வெற்று கோஷங்கள், இந்துத்துவ அரசியல் மட்டுமே இளையோரின் வாக்குகளைப் பெற்றுத்தந்துவிடாது என்பதையும் குறிப்பிட்டுள்ளது அந்த ஆய்வு.
வேலை வாய்ப்பின்மை தொடர்பாக, கடந்த 2019ம் ஆண்டு தேர்தலின்போதே கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்தியாவின் 33% ஆற்றல் வாய்ந்த இளம் தலைமுறையினர் வேலையின்றி உள்ளனர். இந்த அதிருப்தி கடந்த தேர்தலில் எதிரொலித்திருக்க வேண்டியது. ஆனால், புலவாமா, பாலக்கோட் சம்பவங்கள் அனைத்தையும் மாற்றிவிட்டன என்று கூறப்பட்டுள்ளது.
தற்போதைய திட்டமிடப்படாத தொடர் ஊரடங்கு நடவடிக்கைகள், பணிப் பாதுகாப்பற்ற துறைகளில் ஈடுபட்டிருக்கும் இளையோர்களை இன்னும் மோசமாக பாதித்துள்ளது.
மேலும், நாட்டின் உண்மையான வளர்ச்சியில் கவனம் செலுத்தாமல், இந்துத்துவ சித்தாந்த திணிப்பில் கவனம் செலுத்துதல், சிஏஏ போன்ற சர்ச்சைக்குரிய மசோதாக்களை கொண்டுவருதல் உள்ளிட்ட பல விஷயங்களும் இளையதலைமுறையினரின் அதிருப்தியை சம்பாதித்துள்ளன என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், இந்த அதிருப்திகள் மோடிக்கான எதிர்ப்பு வாக்குகளாக மாறும் என்ற உத்தரவாதமும் இல்லை என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.