துபாய்: உலக ‘பாரா’ தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில், இந்தியாவின் சிம்ரன்(100 மீ ஓட்டம்) மற்றும் நீரஜ்(வட்டு எறிதல்) தங்கம் கைப்பற்றி அசத்தினர்.
தற்போது துபாயில், 12வது சர்வதேச உலக பாரா தடகள கிராண்ட் பிரிக்ஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இத்தொடரில், பெண்களுக்கான 100மீ ஓட்டத்தின் இறுதிப் போட்டியில், பந்தய தூரத்தை 12.74 வினாடிகளில் கடந்த இந்தியாவின் சிம்ரன் கவுருக்கு தங்கம் கிடைத்தது. கடந்த 2019ம் ஆண்டில், சீனாவில் நடைபெற்ற கிராண்ட் பிரிக்ஸில் தங்கம் வென்றவர், தற்போது இரண்டாம் முறையாக தங்கம் வென்றார்.
ஆண்கள் பிரிவு வட்டு எறிதல் போட்டி இறுதியில், இந்தியாவின் நீரஜ், அதிகபட்சமாக 35.49 மீ தூரம் எறிந்து தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.
மேலும், நீளம் தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் போட்டிகளிலும், இந்திய வீரர் – வீராங்கணைகள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றனர்.