மும்பை
இந்தியாவில் உள்ள பழங்கால அணைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
இந்தியா பெரும்பாலும் ஆற்றுப்பாசனத்தையே நம்பி உள்ளது. எனவே கோடைக்காலங்களில் நீர் பஞ்சம் ஏற்படாமல் தடுக்க பல அணைகள் நீண்ட காலங்களுக்கு முன்பே கட்டப்பட்டுள்ளது. தற்போது இந்தியா முழுவதும் உள்ள 4,407 பெரிய அணைகளில் சுமார் 1000க்கும் மேற்பட்ட அணைகள் 50 வருடத்துக்கும் அதிக வருடங்கள் பழமையானதாகும். பழைய அணைகள் பாதுகாப்பு அச்சுறுத்தலை அளிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
அவ்வகையில் சமீபத்தில் அணைகள் குறித்த ஆய்வு நடத்தப்பட்டு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வை கனடா நாட்டை சேர்ந்த ஐநா பல்கலைக்கழகத்தின் நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார கல்வி நிலையம் நடத்தி உள்ளது. அந்த அறிக்கையில் காணப்படும் முக்கிய விவரங்களை பகுதி பகுதியாக காண்போம். இதோ முதல் பகுதி
உலக அளவில் கடந்த நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ள பல பெரிய அணைகள் பழமையின் அடையாளங்களை வெளிப்படுத்தி வருகின்றன. இவை அனைத்தும் எத்தனை வருடங்கள் பயன்படும் என வடிவமைக்கப்பட்ட ஆண்டுகளைக் காட்டிலும் அதிக நாட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவ்வகையில் இந்தியாவில் சுமார் 1000க்கும் மேற்பட்ட அணைகள் வரும் 2025 ஆம் ஆண்டில் 50 வருடங்கள் மற்றும் அதற்கும் அதிகமான அளவில் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.,
இந்த 50 வருட ஆயுட்காலம் என்பது அனைத்து அணைகளுக்கும் பொருந்தாது. கட்டுமானம், பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் ஏறவோ இறங்கவோ வாய்ப்புள்ளது. நன்கு கட்டப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்ட அணைகள் சுமார் 100 வருடங்கள் வரை பழமை அடையாமல் இருக்கும். இருப்பினும் பொதுவாக 50 வருடங்கள் என்பது குத்துமதிப்பாக அணைகளின் ஆயுட்காலமாகக் கருதப்படுகிறது.
உலகில் உள்ள அணைகளில் 55% இந்தியா உள்ளிட்ட ஆசியாவில் உள்ள 4 நாடுகளில் அமைந்துள்ளன. அணைகள் நீர் விநியோகம், மின் உற்பத்தி, வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம் போன்றவற்றுக்குப் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி இருக்கப் பல அணைகள் மிகவும் பழமையாக உள்ளதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
கட்டுமானத்தால் ஏற்படும் அபாயங்கள் அணையின் ஆயுட்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் சரியான முறையில் சோதனை செய்து பழுது பார்க்கும் போது இந்த அபாயங்களை நிச்சயமாக தவிர்க்க முடியும். 50 வருடங்களுக்கு மேல் பழமையான அணை கட்டுமானத்தில் சேதம் அல்லது தேய்மானம் வெகுவாக தென்படுகிறது. அது மட்டுமின்றி அணைகளின் மதகுகளும் 50 வருடங்களுக்கு மேல் ஆகும் போது சேதமடைய அதிக வாய்ப்பு உள்ளன.
மனிதனால் கட்டப்பட்ட எந்த ஒரு கட்டுமானத்துக்கும் இயற்கையாக உருவானதை விட ஆயுட்காலம் குறைவாக இருக்கும் என்பது நமக்கு நன்கு தெரியும். எனவே இந்த அணைகளுக்குச் சரியான இடைவெளியில் பராமரிப்பு, நீர் மட்டத்தை நிர்ணயம் செய்தல், ஆகியவை அவசியமாகும். குறிப்பாக வண்டல் மண் அணைகளில் தேங்கும் போது அதிக அளவில் நீரைச் சேமிக்க இயலாத நிலை ஏற்படுகிறது. எனவே வண்டல் மண்ணை அள்ளும் பணி தேவைப்படும் போதெல்லாம் செய்ய வேண்டியது உள்ளது. இது அணைக்கு அணை மாறுபடும்.
மற்றும் அணையின் கட்டுமானப்பகுதிகளை அடிக்கடி பராமரிக்க வேண்டியதும் மிகவும் அவசியமாகிறது. இதற்கான வழிமுறைகள் சர்வதேச அணைகள் ஆணையம் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.இவற்றின் அடிப்படையில் சரியான பராமரிப்பை மேற்கொள்ளும் போது அணையின் ஆயுட்காலம் பன்மடங்கு பெருகி 100 முதல் ஆயிரக்கணக்கான வருடங்களாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் பல அணைகள் இது போலப் பழமையானவையாக இருப்பினும் இன்னும் முழு அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அவ்வகையில் 1980க்கு பிறகு கட்டப்பட்டு வரும் அணைகள் வெள்ளங்கள், அதிக கொள்ளளவு , நில நடுக்க அபாயத் தடுப்பு ஆகியவற்றுக்கு ஏற்றார்போல் வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே இந்த அணைகள் பல தலைமுறைகளுக்குப் பயன் தரும். ஆனால் மண்ணால் கட்டப்பட்டுள்ள பழங்கால அணைகள் தற்போது அதிக அளவில் பாதுகாப்பு அபாயத்தை எதிர்கொள்ள உள்ளதால் இந்திய அணைகளின் சராசரி ஆயுட்காலம் 42 வருடங்களாக உள்ளன.
தொடரும்
விரைவில் இரண்டாம் பகுதியில் சந்திப்போம்