டில்லி

சென்ற ஆண்டு கொரோனா அச்சுறுத்தலால் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 75% குறைந்துள்ளது.

File photo

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.   நாடெங்கும் உள்ள தாஜ்மகால் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டன.  வெளிநாட்டுப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன் பிறகு ஊரடங்கில் சிறிது சிறிதாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு தற்போது கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன.  சுற்றுலாப் பயணிகள் விவரங்கள் குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் எழுத்து பூர்வ பதில் அளித்துள்ளார்.

பிரகலாத் படேல் தனது பதிலில், “கடந்த 2020 ஆம் ஆண்டில் 26,80,000 சுற்றுலாப் பயணிகள் வெளிநாட்டில் இருந்து இந்தியா வந்துள்ளனர்.  இதற்கு முந்தைய ஆண்டான 2019ல் இந்த எண்ணிக்கை 1,09,00,000 ஆக இருந்தது.  சென்ற ஆண்டை விட இது 75% குறைந்துள்ளது.  இதன் காரணமாக ஏற்பட்ட வருவாய் இழப்பு குறித்து ஆய்வு எதுவும் இதுவரை நடக்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.