டில்லி

கொரோனா சிகிச்சைக்காக நாட்டின் முதல் பிளாஸ்மா வங்கியை டில்லி முதல்வர் நேற்று திறந்து வைத்தார்.

கொரோனா நோயில் இருந்து மீண்டு வந்தவர்களின் பிளாஸ்மாவை சேகரித்து அதை உயிருக்குப் போராடும் கொரோனா நோயாளிகளுக்குச் செலுத்துவது பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது.  இந்த சிகிச்சை முறையை ஐசிஎம்ஆர் ஒப்புதலுடன் கேரளா மற்றும் டில்லி மாநிலங்கள் நடத்தி வருகின்றன.

இதுவரை டில்லியில் இந்த சிகிச்சை 29 பேருக்கு அளிக்கப்பட்டு அவர்கள் அனைவரும் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  எனவே இந்த பிளாஸ்மா தெரபி சிகிச்சையை தொடர்ந்து நடத்த டில்லி முடிவு செய்துள்ளது.  இதற்குத் தேவையான பிளாஸ்மா சேகரிக்கும் பிளாஸ்மா வங்கியை நேற்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.

இது இந்தியாவின் முதல் பிளாஸ்மா வங்கியாகும்.  இது குறித்து முதல்வர் கெஜ்ரிவால், “மக்கள் கொரோனா சிகிச்சைக்காக பிளாஸ்மாவை பெறுவதில் பல இடையூறுகள் ஏற்பட்டன.  இனி அதிலிருந்து நிவாரணம் கிடைக்கும் என நம்புகிறேன்.  இந்த வங்கி மூலம் பிளாஸ்மா கொடையாளர்களும் அதிகரிக்கக்கூடும்” எனத் தெரிவித்துள்ளார்.