பெங்களூரு

பெங்களூரு நகரில் இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம் செயல்படும் என  ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

நாடெங்கும் ரயில்வே துறையில் பல வசதிகளையும் மாற்றங்களையும் இந்திய ரயில்வே செய்து வருகிறது.   நாட்டில் உள்ள பல ரயில் நிலையங்களில் வசதிகள் அதிகரிக்கப்படுகின்றன.    குறிப்பாக அதிக பயணிகள் வந்து போகும் நிலையங்கள் சீரமைக்கப்படுகின்றன.

அவ்வகையில் பெங்களூரு நகரில் விரைவில் இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம் செயல்பட உள்ளது.  ஏற்கனவே மெட்ரோ ரயில் நிலையங்களில் மட்டுமே இந்த வசதி உள்ளது.   இந்த வசதி தற்போது சாதாரண ரயில் நிலையத்துக்கும் அளிக்கப்பட உள்ளது.

இது குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், “விரைவில் பெங்களூரு நகரில் இந்தியாவின் முதல் குளிரூட்டப்பட்ட ரயில் நிலையம் செயல்பட உள்ளது.  இந்த ரயில் நிலையம் சுமார் 45 ஆயிரம் சதுர அடி பரப்பில் ரூ.314 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த ரயில் நிலையம் சுமார் 50 ஆயிரம் பேர் நடமாடும் வசதி கொண்டதாகும்.  இதில் 7 நடைமேடைகளும் தினசரி 50 ரயில்களை இயக்கக்கூடிய அளவில் 11 ரயில் தட வசதிகளும் உள்ளன. ” எனத் தெரிவித்துள்ளார்.