புதுடெல்லி:

மக்களவை தேர்தலுக்கு முன்பே இந்திய பொருளாதார வளர்ச்சியின் வேகம் குறைந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.


ராய்ட்டர்ஸ் மேற்கொண்ட சர்வே முடிவின் விவரம் வருமாறு:

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த 5 காலாண்டுகளில் மெதுவான பொருளாதார வளர்ச்சி தான் ஏற்பட்டுள்ளது. அரசின் திட்டங்கள் எல்லாம் பொருளாதார வெற்றிக்கு வழி வகுத்துள்ளன என்பதை மக்களுக்கு சொல்ல முடியாத நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி உள்ளது.

உள்ளூர் மொத்த உற்பத்தி மற்றும் வெளி தேவை குறைந்ததால் பொருளாதார வளர்ச்சி சதவீதம் குறைந்தது.

தற்போதையை வளர்ச்சி கவுரவமானதாக இருந்தாலும், உற்பத்தித்துறைக்கு ஏதும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை பிரதமர் மோடி சந்தித்து வருகிறார். போதிய வேலை வாய்ப்பை ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

பண்ணை உற்பத்தி விலை வீழ்ச்சி கிராமப்புறத்தை பாதிப்படையச் செய்திருப்பதும் பொருளாதார ரீதியில் இந்தியா நலிவுற்றதற்கு காரணமாகும்.
விவசாயிகளுக்கு நேரிடையாக நிதி வழங்குவது வளர்ச்சிக்கு உதவினாலும், அரசின் கடன் தொகையை இது அதிகரிக்கும்.
வரும் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், பொருளாதார சீர்திருத்தம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள். நிலம், தொழிலாளர் வரி, கட்டமைப்பு கொள்கை, தங்கு தடையற்ற வர்த்தகம் ஆகியவற்றின் மீது அரசு கவனம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு ராய்ட்டர்ஸ் சர்வேயில் கூறப்பட்டுள்ளது.