வாஷிங்டன்:
இந்தியாவில் பணமதிப்பிழப்பு அறிவிப்பால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், இந்தியாவின் அனுபவம் ஒரு பாடமாகவும் அமைந்துள்ளது என்று சர்வதேச பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் உள்ள துஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஃப்ளட்சர் பள்ளியின் சர்வதேச தொழில் மற்றும் நிதி துறையின் மூத்த இணை முதல்வராக இருப்பவர் பாஸ்கர் சக்கரவர்த்தி. இவர் ‘ஹார்வர்டு பிஸ்னஸ் ரிவியூ’ இணையளத்தில் இந்திய பணமதிப்பிழப்பு குறித்து ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.
அதன் விபரம்…
பணமதிப்பிழப்பு அறிவிப்பு கொள்கை தவறாக சிந்திக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி, குறிப்பாக ஏழை மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஜனவரி முதல் படிப்படியாக குறைந்து தற்போது 5.7 சதவீத வீழ்ச்சியை அடைந்துள்ளது.
தற்போது ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையில் இந்த கொள்கை முடிவால் பல பாடங்கள் கற்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு ஏற்பட்ட இந்த அனுபவம் உலக நாடுகளுக்கு நல்ல பாடமாக அமைந்துள்ளது. உலக நாடுகளில் உள்ள கொள்கை வடிவம¬ப்பாளர்கள், பொருளாதார திட்டங்களை மேற்கொள்வோருக்கும் இது பெரும் உதவியாக இருக்கிறது.
முதல் பாடம்
ஒரு முடிவு எடுப்பதற்கு முன்பு அதற்கு ஏற்ற சரியான வல்லுனர்கள் யார் என்பதை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஒரு கொள்கை முடிவை அமல்படுத்து முன்பு வல்லுனர்கள், அனுபவம் பெற்றவர்களின் ஆலோசனைகளை தெளிவாக பெற வேண்டும். மோடி அரசு இதை செய்யவில்லை. ஆர்பிஐ முன்னாள் கவர்னரான ரகுராம் ராஜன் போன்ற தகுதியுள்ள நபர்களின் ஆலோசனைகளை பெற தவறிவிட்டது. அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக இருந்துள்ளார்.
அடுத்த வல்லுனரான இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்துவிட்டார். ஆனால், இதை பற்றி எதுவுமே தெரியாமல், சமூக ஆர்வலர் என்ற பெயரில் உலா வரும் அனில் போக்லி ஆலோசனையுடன் மோடி இந்த 94 பக்கங்கள் கொண்ட அறிக்கையை மீடியாக்களில் வெளியிட்டார். மற்ற வல்லுனர்கள் யவரோடும் ஆலோசனை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.
தகவல்கள், ஆய்வுகள் மேற்கொண்டு விவாதங்கள், ஆலோசனை மேற்கொண்டு இந்த முடிவால் ஏற்படவுள்ள தாக்கங்கள் குறித்த தெளிவு பெற்றிருக்க வேண்டும். இது போன்ற செயல்பாடுகளை கட்டாயம் பதிவு செய்திருப்பது அவசியமானதாகும். இது ரகசியமாக நடந்திருந்தாலும் பதிவு முக்கியமானதாகும். அப்போது தான் அது குறித்த அனைத்து விளக்கங்களையும் அரசு அளிக்க முடியும். ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட ஒரு ஆட்சி எதிர்காலத்தில் தனது நாட்டு குடிமக்களுக்கு, நாட்டுக்கும் இதை தெரியபடுத்த வேண்டும்.
2வது பாடம்
அனைத்து கொள்கை முடிவுகள் தொடர்பாக உள்ள அடிப்படை தகவல்கள் புறக்கணிக்க கூடாது. மக்கள் நலன் சார்ந்த நோக்கத்துடன் தான் அனைத்து கொள்கைகளும் இருக்க வேண்டும். ஆனால் இங்கு அனைத்து முடிவுகளும் வர்த்தகம், மக்களுக்கு சுமை அளிக்கும் கொள்கைகள் தான் கொண்டு வரப்படுகிறது. எந்த திட்டமானாலும் அதற்கான செலவினத்தை முதலில் கணக்கிட வேண்டும். இது ஒரு சாதாரண மதிப்பீடு தான். இதனால் அந்த கொள்கையின் தோல்வியை தடுக்கவோ அல்லது பெரிய அளவில் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படுவதை தடுக்க முடியும்.
ஊழல் ஒழிப்பு மற்றும் சட்ட விரோத செயல்பாடுகளை தடுக்கும் வகையில் கொண்டு வரப்பட்டதாக கூறப்படும் பணமதிப்பிழப்ப அறிவிப்பு மோடியின் துணிச்சலான நடவடிக்கை என பலரும் பாராட்டுகின்றனர். அதோடு மாநில தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதற்கு இவ்வளவு பெரிய வலுவான நடவடிக்கையை மோடியின் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
புழக்கத்தில் இருந்த 86 சதவீத ரூபாய் நோட்டுக்களை மதிப்பிழப்பு செய்தது ஒரு தானியங்கி சிகப்பு கொடியாக தான் இருக்கிறது.
இது பொருளாதாரத்தில் பேரிழப்பை கொண்டு வந்துவிட்டது. மேலும், நாட்டில் உள்ள 90 சதவீத தொழிலாளர்கள் ரொக்க வருமானத்தை நம்பி தான் உள்ளனர். இது நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் தொ
ழிலாளர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்திவிட்டது. இந்தியாவில் வெளியிடப்படாத சொத்துக்களின் மதிப்பு 6 சதவீதம் மட்டுமே உள்ளது சமீபத்திய வருமான வரித்துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் கொள்கை ஆயுதம் தவறாக குறி வைத்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.
3வது பாடம்
மூன்றாவதாக மனிதர்களின் பழக்க வழக்கங்களை கருத்தி கொள்ள வேண்டியது அவசியமாகும். கொள்கையால் ஏற்படும் தாக்கங்கள் குறித்த கோட்பாடு வகுத்திருக்க வேண்டும். புதிய சூழ்நிலை மாற்றத்திற்கு மக்கள் எப்படி தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள் என்று யூகித்திருக்க வேண்டும். மக்களுக்கு என்ன வேண்டும், மக்கள் எதை நம்புவார்கள், புதிய சூழ்நிலை குறித்து மக்களுக்கு என்ன தெரியும் என்பதை கணக்கில் கொள்ளவில்லை.
பணமதிப்பிழப்பால் தங்களது பணத்திற்கு எவ்வித பாதிப்பு இல்லை என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். அதனால் அவர்கள் வங்கிகளில் டெபாசிட் செய்துவிட்டனர். ஆனால், அதிக அளவில் பணம் வைத்திருந்தவர்கள் இடைத்தரகர்களிடம் கமிஷன் அடிப்படையில் அதிக அளவில் செல்லாத ரூபாய் நோட்டுக்களை விற்று விட்டனர். நாடு முழுவதும் இதற்காக ஒரு நெட்ஒர்க் செயல்பட்டது. இதன் மூலம் அதிக அளவில் பண மோசடி நடந்துள்ளது.
இடைத்தரகர்கள் இதர மக்களிடம் செல்லாத ரூபாய் நோட்டுக்களை விநியோகம் செய்து வங்கிகளில் டெபாசிட் செய்துவிட்டனர். சிறிய அளவிலான பணத்தை மட்டுமே அவரவர்கள் தங்களது வங்கி கணக்குகளில் செலுத்தினர். சட்டவிரோதமாக இருந்த பணத்தை ஒழிக்க பணமதிப்பிழப்பு என்ற அறிவிப்பு முற்றிலும் தோல்வியை தழுவிட்டது. இதனால் தான் புழக்கத்தில் இருந்த 99 சதவீத ரூபாய் நோட்டுக்களும் திரும்பி வந்துவிட்டதாக ஆர்பிஐ சமீபத்தில் அறிவித்தது.
4வது பாடம்
அடுத்ததாக டிஜிட்டல் பரிவர்த்தனை என்ற ஆயுதம் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலகம் முழுவதும் மொபைல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுடப்ம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதன் மூலம் பெரிய அளவிலான தொழில்நுட்ப துறை முதலைகள் தங்களது பொருட்கள் மற்றும் தொழில்நுட்பத்தை சமூக நலன் என்ற பெயரில் பயன்பாட்டிற் கொண்டு வந்துள்ளது.
இதன் மூலம் சில நன்மைகள் இருக்கிறது என்பது மறுப்பதற்கில்லை. இந்தியாவில் சட்ட விரராதமாக கையில் பணம் வைத்திருப்பதை தவிர்ப்பதற்கு இது ஆரம்பகட்டமாக கொண்டு வரப்படுகிறது. டிஜிட்டல் பரிமாற்றத்தை கொண்டு வரும் வகையில் தான் பணமதிப்பிழப்பு அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் வெளிப்படைத்தன்மை, ஆன்லைன் வர்த்தகம் அதிகரிப்பு போன்று இந்தியா டிஜிட்டல் காலத்தை நோக்கி முன்னேறுகிறது.
ஆனால், சமீபத்தில் ஆர்பிஐ வெளியிட்ட தகவல் மூலம் மத்திய அரசின் கொள்கை சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பணமதிப்பிழப்புக்கு முன் இருந்த டிஜிட்டல் பரிவர்த்தனையின் மதிப்பும், எண்ணிக்கையும் அதன் பிறகு குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமதிப்பிழப்புக்கு பின் ஒவ்வொரும் மாதமும் டிஜிட்டல் பரிவர்த்தனை இறங்கு முகமாக உள்ளது.
மொபைல் போன் மூலம் வங்கி கணக்குகளுக்கு இடையிலான உடனடி பண பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனைகளும் சரிவை சந்தித்துள்ளது. எப்படியும் எதிர்காலத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனை வளர்ச்சி அடைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இந்த ஒரே ஒரு டிஜிட்டல் பரிவர்த்தனைக்காக நாட்டில் புழக்கத்தில் இருந்த 86 சதவீதம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று ஏன் அறிவிக்க வேண்டும்.
பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பின்னரும் டிஜிட்டல் பரிவர்த்தனை ஏன் வளர்ச்சி அடையவில்லை என்ற இந்தியாவின் அனுபவம் வெளிநாடுகளுக்கு கை கொடுக்கும். டிஜிட்டல் பரிவர்த்தனை குறித்த புரிதலை மக்களிடம் ஏற்படுத்தவில்லை. அதோடு டிஜிட்டல் பரிவர்த்தனையின் தரமும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. இது போன்ற காரணங்களால் மக்கள் மீண்டும் பழைய ரொக்க பரிமாற்றத்திற்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மாஸ்டர் கார்டு நிறுவனத்துடன் இணைந்து சமீபத்தில் உலக அளவில் நடந்த ஒரு ஆய்வில் மொத்தம் 42 நாடுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்வது தெரியவந்துள்ளது. இதில் இந்தியா 41வது இடத்தில் உள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானை மட்டுமே இந்தியா முந்தியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து பயன்பாட்டை எளிமையாக்கும் வரை டிஜிட்டலுக்கு மாற்றம் என்பது அர்த்தமற்றதாக தான் இருக்கும்.
இதன் மூலம் தைரியமன கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு உலக தலைவர்கள் மத்தியில் ஒரு விதமான அழுத்தம் ஏற்பட்டுள்ளது. உண்மையான கொள்கை முடிவுகளை சரியான பாதையில் செலுத்தவில்லை என்றால் சிரமத்தை ஏற்படுத்தும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. குறைந்த கால அரசியல் லாபத்திற்காகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்காகவும் எடுக்கப்படும் முடிவுகளால் பொருளாதாரத்திற்கு நீண்ட கால சிக்கலை ஏற்படுத்தும்.
சரியான வல்லுனர்களிடம் ஆலோசித்து, விளக்கங்களை பெற்று ஆதாரம் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதே சிறந்ததாகும். இந்தியாவின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை அனைவருக்கும் ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.