புதுடெல்லி: நாட்டின் விமானப்படையை வலுப்படுத்தும் நோக்கில், 114 புதிய போர் விமானங்களை வாங்குவதற்கான சர்வதேச ஒப்பந்தங்களை கோரியுள்ளது மத்திய மோடி அரசு.
மொத்தம் 15 பில்லியன் அமெரிக்கா டாலர் மதிப்பு கொண்ட இந்த ஒப்பந்தம், தற்போதைய நிலையில், உலகின் மிகப்பெரிய ராணுவ ஒப்பந்தமாக கருதப்படுகிறது.
இந்திய விமானப்படையில் இன்னும் பயன்படுத்தப்பட்டுவரும் பழைய விமானங்களுக்குப் பதிலாக புதிய விமானங்களை வாங்கி வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போயிங் நிறுவனம், லாக்ஹீட் மார்ட்டின் கார்பரேஷன் மற்றும் ஸ்வீடன் நாட்டின் சாப் ஏபி ஆகிய முக்கிய உலகளாவிய நிறுவனங்கள் முதற்கட்டமாக இந்த ஒப்பந்தத்தில் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்த ஒப்பந்தத்தின்படி, 85% தயாரிப்புப் பணிகள் இந்தியாவில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மோடியின் முதல் ஐந்தாண்டு ஆட்சி காலத்தில், புதிய ஆயுத கொள்முதல் தொடர்பாக எந்த குறிப்பிடத்தக்க ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்தாண்டின் துவக்கத்தில் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதலில், இந்தியாவின் பழைய மிக் 21 ரக விமானத்தை, பாகிஸ்தானின் எஃப் – 16 ரக விமானம் சுட்டு வீழ்த்தியது நினைவிருக்கலாம்.
இதுபோன்ற அண்டை நாட்டு அச்சுறுத்தல்களை சமாளிக்கவே, இந்த புதிய பெரிய ராணுவ ஒப்பந்தம் என்று தெரிவிக்கின்றனர்.