டில்லி:

நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை சமாளிக்க முடியாமல் இந்திய விமான நிலையங்கள் திணறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

குறைந்த கட்டணம், சிறந்த இணைப்பு போன்ற காரணங்களால் கடந்த 10 ஆண்டுகளில் இந்திய விமான பயணிகளின் எண்ணிக்கை 6 மடங்கு உயர்ந்துள்ளது. இதை சமாளிக்க முடியாமல் இந்திய விமான நிலையங்கள் திணற தொடங்கியுள்ளன. இந்திய விமான நிலையங்களிந் பயணிகள் கொள்ளளவை உயர்த்த கோடி கணக்கில் செலவு செய்ய வேண்டிய நிலை வரும் என்று வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்.

குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் விமானப் பயணம் அதிகரித்து வருகிறது. ஆனால், இதை எதிர்கொள்ளும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இந்தியாவின் முக்கிய விமானநிலையங்களில் பயணிகள் அதிகரிப்பை சமாளிக்கும் வகையில் புதிய கட்டமைப்புகள் ஏற்படுத்த வேணடும் என்று விமானபோக்குவரத்து மைய தெற்காசிய இயக்குனர் பினில் சேமாயியா எச்சரித்துள்ளார்.

2016ம் ஆணடில் 26.5 கோடி உள்ளூர் பயணிகளை இந்திய விமான நிலையங்கள் கையாண்டுள்ளது. இந்த ஆண்டு இதன் எண்ணிக்கை 30 கோடியை எட்டும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விமானநிலையங்களிலும் மொத்தம் 31.7 கோடி பயணிகளை கையாளும் கொள்ளளவு திறன் மட்டுமே உள்ளது.

2008ம் ஆண்டில் 4.4 கோடி பேர் மட்டுமே விமானங்களில் பயணம் செய்தனர். 2025ம் ஆண்டில் உலகின் மூன்றாவது பெரிய சந்தையை பிடிக்கபோகும் பிரிட்டனை, இந்தியா 2036ம் ஆண்டில் 47.80 கோடி பயணிகளுடன் முந்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து நெருக்கடி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு பெரும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.

இந்தியாவில் உள்ள 30 முதல் 40 வரையிலான முன்னணி நகர விமானநிலையங்கள் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் அதன் கொள்ளளவை தாண்டி பயணிகளை கையாள வேண்டிய நிலையில் இருக்கும். கடந்த 3 ஆண்டுகளாக ஆண்டுதோறும் விமானங்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்து வருகிறது.

டேராடூன், ஜெய்பூர், கவுகாத்தி, மங்களூர், ஸ்ரீநகர், புனே உள்ளிட்ட 10 விமானநிலையங்கள் ஏற்கனவே அதன் கொள்ளளவை தாண்டி பயணிகளை கையாண்டு வருகிறது. இதர விமானநிலையங்கள் கொள்ளளவை நெருங்கி கொண்டிருக்கிறது. டில்லி இந்திராகாந்தி விமானநிலையம், சென்னை சர்வதேச விமானநிலையங்கள் அடுத்த 4 முதல் 6 ஆண்டுகளில் அதன் கொள்ளளவை அடையும் என எதிர்பார் க்கப்படுகிறது.

மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் அதன் கொள்ளளவில் 94 சதவீதத்தை நெருங்கிவிட்டது. மேலும், இந்த விமானநிலையம் ஒரு ஓடுதளத்தை கொண்ட விமானநிலையங்களில் ஒரே நாளில் அதிகப்படியாக 980 விமானங்களை இயக்கி சாதனை படைத்தது.

விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், விமான நிலையங்களை விஸ்தரிப்பு செய்வதில் பல்வேறு சிக்கல்கள் நீடித்து வருகிறது. விமானநிலையங்களை ஒட்டிய பகுதிகள் குடிசைப் பகுதிகளாக இருப்பதால் அதை கையகப்படுத்தி ஓடுதளங்களை அதிகப்படுத்துவதில் பிரச்னை ஏற்படுகிறது.

மும்பை விமானநிலைய நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் 30 கி.மீ. தொலைவில் நாவி மும்பையில் மத்திய அரசு புதிய விமான நிலையத்தை அமைத்து வருகிறது. நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இது 2023ம் ஆண்டு தொடங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.