துபாய்

கொரோனா பரவுதலையொட்டி இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை நிலவுவதால் அரபு நாடுகளில் உள்ள இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும் என அமீரக இந்தியத் தூதர் எச்சரித்துள்ளார்.

இந்திய தலைநகர் டில்லியில் உள்ள நிஜாமுதின் மசூதியில் ஒரு மத நிகழ்வு நடந்தது.  அதில் கலந்துக் கொண்டவர்கள் மூலமாக இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவியது.  இதையொட்டி நாட்டு மக்களிடையே அனைத்து இஸ்லாமியர்களையும் கொரோனா பாதிப்புக்குக் காரணம் எனப் பலரும் கூறி வருகின்றனர்.   இது தவறு என பல அரசியல் தலைவர்கள் அறிவுறுத்தியும் இந்த மனநிலை தொடர்ந்து நிலவி வருகிறது.

இது வெளிநாடு வாழ் இஸ்லாமியர்களுக்கு மிகவும் அதிருப்தியை அளித்துள்ளது.    இஸ்லாமிய அமைப்புக்கள் இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு இஸ்லாமியர்கள் காரணம் எனக் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன   இது மத ஒற்றுமை மற்றும் சமத்துவத்தை எதிர்ப்பதாகப் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.  இந்நிலையில் பாஜகவின் மக்களவை உறுப்பினர் அரேபியப் பெண்களைக் குறித்து ஆபாச கருத்து தெரிவித்தது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அமீரக இந்தியத் தூதர் பவன் கபூர் தனது டிவிட்டரில், “இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் மதப்பாகுபடுகளுக்கு எதிரான மனநிலையைப் பகிர்ந்துக் கொள்கின்றன.  பாகுஆப்டு என்பது நமது சட்ட விதிகளுக்கும் ஒழுக்க முறைகளுக்கும் எதிரானவை,  அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இதை உணர்ந்து இந்தியப் பிரதமர் கூற்றுப்படி கவனமாக இருக்க வேண்டும்” என பதிந்துள்ளார்.

பிரதமர் மோடி தனது டிவிட்டரில், “கோவிட் 19 பாதிக்கும் போது இனம்,மதம், நிறம், சாதி குலம், கோத்திரம், மொழி, எல்லை எதையும் பார்க்காது.   நாம் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றுடன் பொறுப்பாகவும் ஒழுக்கமாகவும் நடந்துக் கொள்ள வேண்டும்.   நாம் என்றும் இணைந்து இருப்போம்” என பதிந்திருந்தார்.