டெல்லி:
மக்களிடம் நீண்ட காலமாக இருந்து வரும் பழைய முறையை மாற்றுவது என்பது எளிதல்ல என்பதை ரூபாய் நோட்டுக்கள் மூலம் தெரியவந்துள்ளது.
மக்களிடம் புரையோடிக்கிடந்த பண பரிமாற்ற முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. டிஜிட்டல் பணபரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்ற அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் தற்போது மக்கள் மீண்டும் பண பரிமாற்ற முறைக்கே மாறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுக்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இதே உறுதி செய்கிறது. இது தொடர்பாக லைவ் மின்ட் என்ற செய்தி நிறுவனம் இரு அட்டவணைகளை யதார் செய்து வெளியிட்டுள்ளது.
அதன் விபரம்…
மக்களும் பணமும் மீண்டும் ஒன்றிணைகிறார்கள். இதற்கு ரிசர்வ் வங்கியும் உதவி வருகிறது என்பது இரண்டு அட்டவணைகள் மூலம் தெளிவாக தெரிகிறது.
முதலாவது அட்டவணைப்படி…..
மக்கள் கையிருப்பில் இருக்கும் பணம் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி 17ம் தேதி வரையிலான 15 நாட்களில் ரூ. 10.63 டிரில்லியன் பணம் மக்கள் கைக்கு சென்றுள்ளது. இதற்கு முந்தைய 15 நாட்களை விட இது 8.5 சதவீதம் அதிகமாகும். பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியானது முதல் இது வரை 36 சதவீத ரூபாய் நோட்டுக்கள் மக்களிடம் சென்றுள்ளது.
ஒவ்வொரு 15 நாட்களுக்கும் புழக்கத்திற்கு செல்லும் பணத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்று புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு ஏற்ப புதிய ரூபாய் நோட்டுக்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த ரூபாய் நோட்டுக்கள் அனைத்து ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட சட்டப்பூர்வமானதாகும். இந்த பணம் முழுவதும் தனிநபர் கைகளில் தற்போது உள்ளது.
இரண்டாவது அட்டவனைப்படி….
இந்தியர்கள் வங்கி கிளைகளிலோ அல்லது ஏடிஎம் மூலமாகவோ பணத்தை எடுத்து வருகின்றனர். கடந்த ஜனவரியில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. அதோடு புதிய ரூ. 500 நோட்டுக்களும், குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுக்களும் ஏடிஎம்.களில் அதிகம் நிரப்பப்பட்டவுடன் பணம் எடுக்கும் அளவு கடுமையாக உயர்ந்துள்ளது.
ஏடிஎம் மூலம் ஜனவரியில் 1.5 டிரில்லியன் பணம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மாதத்தில் இது 78 சதவீதம் அதிகரித்தது என்பது ரிசர்வ் வங்கியின் தகவல்கள் அடிப்படையில் தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இது போன்ற ஏடிஎம் பரிமாற்றங்கள் முந்தைய மாதங்களை விட 50 சதவீதத்துக்கும் மேல் குறைந்தது.
ஜனவரியில் தனிநபர் கடன், கிரெடிட் கார்டு மூலம் ரூ. 152 கோடி வரை பணம் எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தை விட இது 73 சதவீதம் அதிகமாகும். பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு முன்னாள் டெபிட், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கப்பட்ட அளவும், அறிவிப்புக்கு பின்னர் எடுக்கப்பட்ட பணமும் கிட்டத்தட்ட நெருங்கிய அளவிலேயே இருக்கிறது.
பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுத்தது ஒவ்வொரு மாதத்திற்கும் 12 சதவீதம் மட்டுமே அதிகரித்து வந்தது. இந்த அறிவிப்புக்கு முந்தைய மாதங்களில் டெபிட் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்ட அளவை விட குறைவாகவே இருந்தது. விற்பனை நிலையங்களில் ஸ்வைப்பிங் மெஷினில் டெபிட் கார்டு பயன்படுத்துவது ஜனவரி மாதத்தில் குறைந்தது. எனினும் கடந்த நவம்பர் மாதத்திற்கு முந்தைய பயன்பாட்டோடு இதை ஒப்பிட்டால் தற்போதைய நிலை வலுவானதாகவே இருக்கிறது.
பணம் மீண்டும் திரும்பிவிட்டது. ஆனால் முழுமையாக வந்து சேராத நிலை உள்ளது. ஏடிஎம்.களில் பணம் எடுக்கும் முறை 90 சதவீதம் அப்படியே உள்ளது. ஸ்வைப் மெஷினில் டெபிட் கார்டு பயன்பாடு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. பணம் எடுப்பதற்கான அனைத்து கட்டுப்பாடுகளும் மார்ச் 13ம் தேதி விலக்கி கொண்ட பிறகு அனைத்து இந்தியர்களும் ரொக்கமுள்ள பணக்காரர்களாக திகழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.